பல ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த என்.டி.ஆர் – திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. ‘அரவிந்த சமேத வீரராகவா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இருவரும் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய படம் குறித்த தகவலை நடிகர் என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் வெளியிட்டார். அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம், வேல் மற்றும் டி.என்.ஏ. வடிவமைப்பு இடம்பெற்றிருப்பது படத்தின் கரு குறித்து ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், “One Spear, One Purpose… One Divine Reckoning” (ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு) என்ற வாசகமும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புராணக் கூறுகளும், தெய்வீக சிந்தனையும் பின்னணியாக கொண்ட இந்த திரைப்படம், உணர்வுப்பூர்வமான கதை, விறுவிறுப்பான ஆக்ஷன், பிரம்மாண்ட காட்சியமைப்பு மற்றும் தனித்துவமான திரைக்கதையுடன் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். அவரது இசை படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.
வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணி, முன்னணி இசையமைப்பாளர் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்துள்ளதால், இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படங்களில் ஒன்றாக உருவாகும் என்ற நம்பிக்கை திரையுலகில் நிலவுகிறது.





