“பாகுபலி” உலகையே வென்றது… 10 ஆண்டுகள் கடந்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரபாஸ்!

இந்திய சினிமாவின் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த ‘பாகுபலி: தி பிகினிங்’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் படம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை நடிகர் பிரபாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த திரைப்படம் அவரை இந்திய அளவிலான நட்சத்திரத்திலிருந்து உலகளவில் அறியப்பட்ட பான்-இந்தியா நடிகராக உயர்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘Baahubali: The Torch Bearer’ வெளியீட்டை முன்னிட்டு பேசிய பிரபாஸ், ‘பாகுபலி’ மொழி, நாடு, கலாச்சாரம் என அனைத்து எல்லைகளையும் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களின் இதயத்தை வென்றிருப்பதை பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.

அவர் கூறுகையில், “இத்தாலியில் என்னைப் பார்த்தவர்கள் என் பெயரைச் சொல்லி அழைத்த அனுபவம் மறக்க முடியாதது. அதேபோல், பெருவில் அறப்பணிக்காக சென்றபோது அங்கிருந்த குழந்தைகள் ‘பாகுபலி’ திரைப்படத்தின் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தினர். அந்தப் படத்தின் தாக்கம் உலகம் முழுவதும் எவ்வளவு பெரிய அளவில் சென்றடைந்துள்ளது என்பதை அப்போது உணர்ந்தேன்,” என்றார்.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தொடர்பான ஒரு சுவாரஸ்ய சம்பவத்தையும் பிரபாஸ் பகிர்ந்தார். “நார்வேயில் ஒருவர் முதலில் ராஜமௌலி சாரிடம், ‘நீங்கள் ஒரு இயக்குநரா?’ என்று கேட்டார். பின்னர், ‘நீங்கள்தான் பாகுபலி படத்தின் இயக்குநர் என்று நினைக்கிறேன்’ என்று கூறினார். உலகின் பல பகுதிகளில் ‘பாகுபலி’ ஏற்படுத்திய தாக்கத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் படத்திற்குப் பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிட்டதாக கூறிய பிரபாஸ், “இப்போது எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அதனால் நகைச்சுவையாக ராஜமௌலி சாருக்கு போன் செய்து, ‘எனக்கு இனிமேல் சுதந்திரமாக பயணம் செய்ய முடியாதா?’ என்று கேட்பேன். முன்பு மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு யாரும் கவனிக்காமல் செல்வேன். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் ‘பாகுபலி’ என்று அழைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்,” என்றார்.

பத்து ஆண்டுகள் கடந்தும் ‘பாகுபலி’ திரைப்படத்தின் தாக்கம் குறையாமல் தொடர்கிறது. இந்திய சினிமாவின் உலகளாவிய அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ள இந்தப் படத்தின் மூலம், பிரபாஸ் இன்று உலக அரங்கில் இந்திய சினிமாவின் முக்கிய முகங்களில் ஒருவராக தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.