சூர்யா – த.செ. ஞானவேல் கூட்டணி… “S-48” இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் ஆகியோர் முதல் முறையாக இணையும் புதிய திரைப்படமான ‘S-48’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றிப் படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ், இந்த திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறது.

‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா – த.செ. ஞானவேல் கூட்டணி மீண்டும் இணைவதால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமூகப் பொறுப்பும், வணிக அம்சங்களும் இணைந்த வலுவான கதையுடன் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறுகையில், சூர்யா போன்ற திறமையான நட்சத்திரத்துடனும், உலகளவில் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேலுடனும் இணைவது ஹொம்பாலே பிலிம்ஸுக்கு பெருமை என தெரிவித்தார். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தரமான திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கதாநாயகியாக கயாது லோகர் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, குமரவேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒளிப்பதிவை எஸ்.ஆர். கதிர் கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பை கே. கதிர் மேற்கொள்கிறார். படத்தொகுப்பை ஃபிலோமின் ராஜ் கவனிக்க, திரைக்கதை உருவாக்கத்தில் பா. கிருத்திகா பங்களிக்கிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.