இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் & கிரைன்ஸ் (Noise & Grains), இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ‘Walking Through the Rainbow’ இசை நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமான சிம்பொனி கச்சேரியாக நடத்தி, அவரது இசையை தலைமுறைகள் கடந்து ரசித்து வரும் ரசிகர்களுக்கு புதிய இசை அனுபவத்தை வழங்கியுள்ளது.
பல்வேறு பிரம்மாண்டமான கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்கி வரும் Noise & Grains, இந்த இசை நிகழ்ச்சியையும் மிகுந்த திட்டமிடலுடன் வடிவமைத்திருந்தது. நவீன தொழில்நுட்ப வசதிகள், சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் ரசிகர்களின் வசதியை கருத்தில் கொண்ட ஏற்பாடுகள் என நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
வழக்கமான லைவ் மியூசிக் நிகழ்ச்சிகளின் பாணியில் இருந்து மாறுபட்டு, யுவன் ஷங்கர் ராஜாவின் இசைப் படைப்புகளை முழுமையான ஆர்கெஸ்ட்ரா மற்றும் சிம்பொனி வடிவில் ரசிகர்கள் அனுபவிக்கும் வகையில் ‘Walking Through the Rainbow’ உருவாக்கப்பட்டது. அவரது பிரபலமான பின்னணி இசைகள், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்கள் மட்டுமின்றி, இதுவரை வெளியிடப்படாத இசைக்கோர்வைகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
யுவனின் இசையை இதுவரை கேட்டு ரசித்த விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே Noise & Grains நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. நீண்டகால திட்டமிடல், பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் நுணுக்கமான செயல்பாடுகளுடன் கலை, இசை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, நிகழ்ச்சியின் மையமாக யுவனின் இசையே இருக்கும் வகையில் முழு அரங்கமும் வடிவமைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி குறித்து ஷோ டைரக்டர் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘Walking Through the Rainbow’ என்பது வெறும் இசை நிகழ்ச்சியாக இல்லாமல், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மீதான ஆழமான ரசனையில் இருந்து உருவான கனவு என தெரிவித்துள்ளார். யுவனின் ரசிகராகத் தொடங்கிய தனது பயணம், அந்தக் கனவை மேடையில் வடிவமைத்து அது ரசிகர்கள் முன் உயிர்பெறுவதை காணும் வாய்ப்பாக மாறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் தயாரிப்பு இயக்குநர் மகாவீர், இந்த பிரம்மாண்டமான கச்சேரிக்காக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் திட்டமிடல் மற்றும் வடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இசையின் அடிப்படை உணர்வுகளையும், இசைக்கலைஞர்களின் திறமையையும், நேரடியாக இசையை கேட்டு ரசிக்கும் அனுபவத்தையும் ரசிகர்களுக்கு மீண்டும் நெருக்கமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நிகழ்ச்சி உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், ரசிகர்கள் இசையை அணுகும் விதம் காலத்துக்கு ஏற்ப மாறி வரும் நிலையில், நேரடி இசையின் உணர்வை மையப்படுத்திய அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதில் குழு கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
‘Walking Through the Rainbow’ உருவாக்கிய அனுபவம் ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் இதைவிட பிரம்மாண்டமான அளவில் பல்வேறு ரசிகர்களிடம் இந்த இசை அனுபவத்தை கொண்டு செல்ல திட்டமிட்டு வருவதாகவும் நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை உலகை சிம்பொனி வடிவில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இந்த நிகழ்ச்சி, அவரது இசைப் பயணத்தில் மற்றுமொரு வித்தியாசமான அனுபவமாக அமைந்துள்ளது.






