அமீரின் அடுத்த அதிரடி அவதாரம் – மாரி செல்வராஜ் வழங்கும் “மாகாளி”!

தமிழ் சினிமாவில் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது புதிய திரைப்படம் ஒன்றை வழங்குகிறார். ‘மாகாளி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது.

நடிகர் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தில் நிலவும் முக்கியமான ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு, அதன் தாக்கத்தையும் மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஆழமாகப் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மனித வாழ்க்கையின் வலி, அதன் எல்லைகள் மற்றும் சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகும் ‘மாகாளி’, பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக பாதிக்கும் வகையிலான அழுத்தமான படைப்பாக உருவாகி வருகிறது.

படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. முதல் போஸ்டரில், பிரம்மாண்டமான விலங்கின் எலும்புக்கூட்டுக்குள் தனிமையில் நடந்து செல்லும் அமீரின் தோற்றம் இடம்பெற்றுள்ளது. மற்றொரு போஸ்டரில், சுற்றிலும் சிதறிக் கிடக்கும் ஏராளமான விலங்குகளின் எலும்புக்கூடுகளுக்கு நடுவே ‘மாகாளி’ என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர்களின் காட்சியமைப்பு படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வெறுமை, அழிவு, இயற்கையின் வேதனை மற்றும் சமூகத்தில் மறைந்திருக்கும் ஒரு யதார்த்தம் என பல்வேறு அடுக்குகளை இந்த போஸ்டர்கள் உணர்த்துவதாக அமைந்துள்ளன. இதனால் ‘மாகாளி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அமீருடன் சுவாசிகா, அனிஷ்மா அனில்குமார், ஹரிஹரன், அஸ்வின் ராம், லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா RK படத்தொகுப்பை கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றுகின்றனர். வர்ஷினி சங்கர் ஆடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

மேலும், சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் ஒலி வடிவமைப்பிலும், கபிலன் விளம்பர வடிவமைப்பிலும், ஜெய்குமார் வைரவன் நிழற்படத்திலும், நாகேந்திரன் ஒப்பனைப் பணியிலும் இணைந்துள்ளனர். வெங்கட் ஆறுமுகம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், சதிஷ் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனர்.

மாரி செல்வராஜின் தயாரிப்பு மற்றும் வழிகாட்டுதலில், அவரது இணை இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் இயக்கும் ‘மாகாளி’ திரைப்படம், சமூக அக்கறை கொண்ட வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.

‘மாகாளி’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.