ஹைதராபாத்தில் கோலாகல பூஜை..! நாளை முதல் தொடங்கும் #ChiruBobby2 படப்பிடிப்பு

சிரஞ்சீவி – இயக்குநர் பாபி கொல்லி – KVN Productions கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான #ChiruBobby2 / #Chiru158 படத்தின் பிரம்மாண்ட தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.

திரையுலகில் சில கூட்டணிகள் அறிவிக்கப்பட்ட உடனேயே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும். அந்த வகையில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும், வெற்றிகரமான இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் முந்தைய கூட்டணியில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்திற்காக கைகோர்த்துள்ளது.

#ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல பிரம்மாண்ட படங்களை வழங்கிய கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் முதல் முறையாக தயாரிப்பில் களம் இறங்குகிறது.

தொடர்ச்சியான அப்டேட்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தின் தொடக்க பூஜை விழா இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் பவன் கல்யாண் மற்றும் நாக பாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை ‘மெகா’ கொண்டாட்டமாக மாற்றினர். மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோன்றிய தருணம் ரசிகர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

பவன் கல்யாண் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஷ்மிதா கொணிதெல கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை இயக்குநர் வி.வி. விநாயக் ஏற்றார். மேலும் பி. கோபால், கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் பல முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மக்கள் ரசனையை துல்லியமாக புரிந்துகொள்ளும் இயக்குநர் பாபி கொல்லி, இந்த முறை மேலும் பிரம்மாண்டமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவரத் தயாராகியுள்ளார். அதிரடி, உணர்ச்சி மற்றும் கண்கவர் காட்சிகளுடன் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்துவரும் சிரஞ்சீவி, இந்த திரைப்படத்தில் தீவிரமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். அண்மையில் அவர் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இந்த உடல் மாற்றம், கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.

படத்தின் தொழில்நுட்ப அணியிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி எழுதியுள்ளனர். பானு – நந்து நகைச்சுவை வசனங்களை உருவாக்கியுள்ளனர்.