“ஜன நாயகன்” ஹெச். வினோத் இயக்கத்தில் கே. வி. என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர். இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், நாசர், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிறையில் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் விஜய், மரணப்படுக்கையில் இருக்கும் தனது தாயை கடைசியாகச் சந்திக்க ஜெயிலர் கெளதம் வாசுதேவ் மேனன் சட்டத்தை மீறி உதவுகிறார். அந்த மனிதநேயத்தை வாழ்நாள் முழுவதும் மறக்காத விஜய், பின்னர் எதிர்பாராத விபத்தில் ஜெயிலர் உயிரிழந்ததும், அவரது மகளை தனது சொந்த மகளாக வளர்க்கிறார்.
காலம் கடந்தபின், வளர்ப்பு மகளான மமிதா பைஜூ ஒரு ஆபத்தான சிக்கலில் சிக்குகிறார். அந்தப் பிரச்சினையின் பின்னணியில், தன்னை சிறைக்கு அனுப்பிய பழைய எதிரியே இருப்பதை விஜய் அறிகிறார். அதன்பிறகு விரியும் பழிவாங்கல், அரசியல், ஆக்ஷன் மற்றும் குடும்ப பாசம் கலந்த திரைக்கதையே ‘ஜன நாயகன்’.
விஜய் வழக்கம்போல தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திரையில் மாஸ் காட்டுகிறார். அதிரடியான சண்டைக் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், அரசியல் சார்ந்த உரைகள் ஆகியவற்றில் முழு ஆற்றலுடன் களமிறங்கியுள்ளார். ஆனால் அவரது முந்தைய படங்களில் ரசிகர்கள் ரசித்த நகைச்சுவை, காதல் மற்றும் குறும்புத்தனமான தருணங்கள் இம்முறையில் பெரிதும் குறைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
நாயகியாக வரும் பூஜா ஹெக்டேவுக்கு கதையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் இல்லை. சில காட்சிகளில் மட்டும் தோன்றும் அவரது கதாபாத்திரம் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
வில்லனாக பாபி தியோல் மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது பின்னணிக் கதை மற்றும் வில்லத்தனமான மாற்றம் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
மமிதா பைஜூ, விஜயின் வளர்ப்பு மகளாக உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக விஜயுடன் பகிரும் பாசமான காட்சிகளில் தனது திறமையை நிரூபிக்கிறார்.
கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், சுனில், ரேவதி, ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை அளித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் படத்தை பிரம்மாண்டமான காட்சிகளுடன் வண்ணமயமாக பதிவு செய்துள்ளார். இருப்பினும், அதிகப்படியான CGI மற்றும் VFX காட்சிகள் இயல்பான உணர்வை குறைத்து, சில இடங்களில் வீடியோ கேம் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.
அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்கின்றன. குறிப்பாக ‘தளபதி கச்சேரி’ பாடல் ரசிகர்களுக்கு திரையரங்கில் கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசையும் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. படத்தின் ஹீரோ அனிருத் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் இசையின் இருப்பு பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதே போல் படத்தின் இயக்குனர் ஹெச். வினோத்தாக இருந்தாலும் சண்டை இயக்குனரே படத்தின் இயக்குனர் என்று சொல்லுமளவுக்கு படம் முழுவதும் சண்டை காட்சிகள் ஆக்கிரமித்துள்ளது.
முதல் பாதி சுவாரஸ்யமாக நகரும் படம், இரண்டாம் பாதியில் பல கிளைக்கதைகள் மற்றும் அரசியல் பிரச்சார அம்சங்களை ஒரே நேரத்தில் இணைக்க முயல்வதால் திரைக்கதை தடுமாறுகிறது. நீளமான திரைக்கதையும், தேவையற்ற காட்சிகளும் படத்தின் வேகத்தை பாதிக்கின்றன.
இயக்குநர் எச். வினோத், விஜயை பல்வேறு பரிமாணங்களில் காட்ட முயன்றிருந்தாலும், அந்த கதாபாத்திரங்களுக்கு தேவையான உணர்ச்சி ஆழத்தை முழுமையாக வழங்கவில்லை. ஒரு முழுமையான கமர்ஷியல் படமா, அரசியல் கருத்து சொல்லும் படமா என்ற குழப்பம் இறுதிவரை நீடிக்கிறது.
மொத்தத்தில், ‘ஜன நாயகன்’ முதல் பாதியில் ரசிகர்களை கவரும் மாஸ் கமர்ஷியல் பொழுதுபோக்காக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை பலவீனம் மற்றும் அரசியல் பிரச்சாரத்தின் அதிகப்படியான தாக்கத்தால் தனது வலிமையை இழக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் முழுமையாக திருப்திப்படுத்தும் படமாக இது அமையவில்லை.
“ஜன நாயகன்” படத்திற்கு மதிப்பீடு 3/5
முதல் பாதியில் மாஸ் விருந்து, இரண்டாம் பாதியில் திரைக்கதை தடுமாற்றம்





