“சத்தியவான் சாவித்திரி” திரை விமர்சனம்

“சத்தியவான் சாவித்திரி” பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் வேடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் (Drumsticks Productions & Zee Studios) தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாம் சி. எஸ். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ் எம், பால சரவணன்,
ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா, மதுசூதனன் ராவ், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, ஏ. வெங்கடேஷ், தீபா சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வழக்கறிஞராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கீர்த்தி சுரேஷ், குடும்பத்தினரின் விருப்பத்தால் சாருகேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொள்கிறார். தனது கனவை நிறைவேற்றுவதற்காகப் பிரபல வழக்கறிஞர் மிஷ்கின்னிடம் உதவியாளராகச் சேர்கிறார்.

ஒரு வழக்கில் தனது குருவான மிஸ்கின்னையே எதிர்த்து வாதாடி வெற்றி பெறுகிறார் கீர்த்தி சுரேஷ் . இதனால் இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. இந்தச் சூழலில், அவரது கணவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார். கணவரைக் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், மீண்டும் மிஸ்கின்னை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் சாவித்திரி வெற்றி பெற்றாரா என்பதே “சத்தியவான் சாவித்திரி” படத்தின் கதை.

சாவித்திரியின் குடும்ப வாழ்க்கை, வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை, காதல் மற்றும் திருமணம் எனப் பயணிக்கும் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. குறிப்பாக, சில குடும்பக் காட்சிகள் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. கதையின் முக்கியமான நீதிமன்ற மோதலுக்குள் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்வது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

கணவர் கொலை வழக்கில் சிக்கிய பிறகு கதையில் சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. சாவித்திரி தனது கணவருக்காக நீதிமன்றத்தில் போராடும் காட்சிகள் ஓரளவுக்கு விறுவிறுப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, இறுதியில் வரும் திருப்பம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இருப்பினும், சில நீதிமன்ற வாதங்கள் இயல்பான சட்ட நடைமுறையைவிட சினிமாத்தனமாக அமைந்துள்ளன.

கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பாவித்தனமும், புத்திசாலித்தனமும் கலந்த வழக்கறிஞராக அவரது நடிப்பு படத்திற்கு முக்கியமான பலம்.

மிஷ்கின் தனது வழக்கமான வித்தியாசமான உடல்மொழி மற்றும் செயற்கையான வசன உச்சரிப்பால் கவனம் ஈர்க்க முயற்சித்திருக்கிறார். ஆனால், எதிர்மறையான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அளவுக்கு அதிகமான நடிப்பை வெளிப்படுத்தி, பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்திருப்பது கதாபாத்திரத்தின் இயல்புத்தன்மையைக் குறைத்து, பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

சாருகேஷ், பால சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

சாம் சி.எஸ். இசையில் பின்னணி இசை சில காட்சிகளுக்கு வலு சேர்த்தாலும், சில இடங்களில் அதிக சத்தமாக அமைந்திருக்கிறது. அருள் வின்சென்டின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பில் முதல் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

இதிகாசக் கதையை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நீதிமன்றப் பின்னணியில் மாற்றியமைத்திருக்கும் இயக்குநர் பிரவீன் எஸ். விஜய்யின் முயற்சி பாராட்டுக்குரியது. பெண்களின் உரிமை, தன்னம்பிக்கை மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்திருப்பது சிறப்பு. ஆனால், திரைக்கதையில் இருக்கும் சில தர்க்கக் குறைகளும், சினிமாத்தனமான நீதிமன்றக் காட்சிகளும் படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.

மொத்தத்தில், முதல் பாதியின் மெதுவான நகர்வு மற்றும் திரைக்கதையின் சில குறைகள் இருந்தாலும், கீர்த்தி சுரேஷின் நடிப்பு, மிஷ்கினின் கதாபாத்திரம் மற்றும் கிளைமாக்ஸ் திருப்பம் ஆகியவற்றால் சத்யவான் சாவித்திரி ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது.

“சத்தியவான் சாவித்திரி” படத்திற்கு மதிப்பீடு 3/5

“சத்தியவான் சாவித்திரி” சுமாரான நீதிமன்றப் போராட்டம்!