“அப்பா குட்டி” திரை விமர்சனம்

“அப்பாகுட்டி” மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, பாத்திமா விஜய் ஆண்டனி (விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்) தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை விஜய் ஆண்டனி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், சித்ரா லட்சுமணன், லிஸி ஆண்டனி, பிரவீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஊட்டியில் தனது மகள் தியாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் விஜய் ஆண்டனி. மகளின் மீது அளவற்ற பாசம் கொண்ட அவர், தாயில்லாத குறையைத் தெரியாமல் மகளை வளர்த்து வருகிறார். அதே ஊரில் பள்ளி ஆசிரியையாக இருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, சூர்யா மீது காதல் கொள்கிறார். இதற்கிடையே, இறந்துவிட்டதாக விஜய் ஆண்டனி கூறிய அவரது மனைவியை, ஊட்டியில் கணவர் மற்றும் குழந்தையுடன் குடும்பமாகப் பார்க்கிறார் ப்ரீத்தி அஸ்ரானி. இந்த அதிர்ச்சித் தகவலை விஜய் ஆண்டனியிடம் தெரிவிக்கும் அவர், குழந்தையிடம் பொய் சொன்னதற்காகவும் வருத்தப்படுகிறார்.

இந்தச் சூழலில், விஜய் ஆண்டனியின் மகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. மரபணு ரத்தக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுமியைக் காப்பாற்ற, உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக உண்மையான பெற்றோரைத் தேடிச் செல்லும் விஜய் ஆண்டனி, அவர்களைக் கண்டுபிடித்து மகளைக் காப்பாற்றினாரா? திருமணமே ஆகாத அவரிடம் குழந்தை வந்தது எப்படி? இறந்ததாகச் சொல்லப்பட்ட மனைவி யார்? என்ற கேள்விகளுக்கான தீர்வே ‘அப்பாக்குட்டி’ படத்தின் மீதிக்கதை.

திரைக்கதை மற்றும் இயக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டிருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் திரைக்கதையைப் புதுப்பிக்க இயக்குநர் தவறியிருக்கிறார். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் போதிய தெளிவும் அழுத்தமான விளக்கங்களும் இல்லாததால் கதையின் அடிப்படையே பலவீனமாகிறது.

முதல் பாதியில் தேவையற்ற காட்சிகள், செயற்கையான நகைச்சுவை, பழைய சினிமா பாணியிலான சம்பவங்கள் என படம் மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியிலும் எதிர்பார்த்த விறுவிறுப்பு இல்லை. உணர்வுப்பூர்வமாகச் சொல்ல வேண்டிய பல காட்சிகள் செயற்கையாக அமைந்திருப்பதால் பார்வையாளர்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

விஜய் ஆண்டனி வழக்கமான ஒரே மாதிரியான முகபாவனைகளுடன் தனது கதாபாத்திரத்தை முடித்திருக்கிறார். தந்தையின் பாசத்தையும், மகளுக்காக அவர் படும் தவிப்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ப்ரீத்தி அஸ்ரானியின் கதாபாத்திர வடிவமைப்பில் அழுத்தம் இல்லாததால், அவரது காதலும் அக்கறையும் பார்வையாளர்களிடம் எந்தவித உணர்வையும் ஏற்படுத்தவில்லை.

சிறுமி லிதன்யா மட்டும் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மற்ற நடிகர்களின் பங்களிப்பும் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கவில்லை.

பகவதி பெருமாள், முத்துக்குமார், அருவி மதன், ஹரிப்பிரியா இசை, ஸ்ரீஜா ரவி, குமார் நடராஜன், பிரவீனா, லிஸி ஆண்டனி, சித்ரா லக்‌ஷ்மணன், மூணாறு ரமேஷ், ஜென்சன் திவாகர், ஹரிதா முத்தரசன், முருகாந்தம்.ஆர் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகை ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், படத்தின் வேகத்திற்கோ காட்சிகளின் உணர்வுகளுக்கோ பெரிய பலம் சேர்க்கவில்லை. பின்னணி இசையும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. படத்தொகுப்பில் இன்னும் கத்தரி போட்டிருக்கலாம்.

ஒரு நல்ல உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு வித்தியாசமான திரைப்படத்தைக் கொடுக்க வாய்ப்பு இருந்தும், பழைய பாணி திரைக்கதையாலும் செயற்கையான உணர்ச்சிக் காட்சிகளாலும் இயக்குநர் அந்த வாய்ப்பை வீணடித்திருக்கிறார். சில காட்சிகளில் சிறுமி லிதன்யாவின் நடிப்பு மட்டுமே ஆறுதல் அளிக்கிறது.

மொத்தத்தில், அப்பா – மகள் பாசத்தைச் சொல்ல வந்த அப்பாக்குட்டி, பழைய சினிமா பாணியாலும் பலவீனமான திரைக்கதையாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாகக் கொடுக்கிறது.

“அப்பா குட்டி” படத்திற்கு மதிப்பீடு 2/5

“அப்பா குட்டி” ஏமாற்றம்