“ஜான் டோ” மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் பிரசாத் தேவினேனி மற்றும் ஷோபு யார்லகட்டா (ஆர்கா மீடியா ஒர்க்ஸ்) தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை முஜீப் மஜீத். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஜாரா வினீத், ஸ்ரிஷ்டி ஒய், அனுபமா குமார், அர்ச்சனா சந்தோக், படவா கோபி, நீரவ் எஸ், கார்த்திக் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கேரளாவில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியில் சேரும் அர்ஜுன் தாஸ், ஏரியில் மூழ்கிய காரிலிருந்து மீட்கப்படும் அடையாளம் தெரியாத எட்டு வயது சிறுவனின் மரணம் குறித்து விசாரணை நடத்துகிறார். இதற்கிடையே, தமிழகத்தின் குறிஞ்சிப்பாடிக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வரும் ஸ்ரிஷ்டி சிங்கின் மகன் திடீரென காணாமல் போகிறான்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதை அறியும் அர்ஜுன் தாஸ், தமிழக காவல் ஆய்வாளர் சஞ்சனா நடராஜன் உடன் இணைந்து விசாரணையைத் தொடங்குகிறார். அடுத்தடுத்து கிடைக்கும் தடயங்கள், 17 சிறுவர்கள் காணாமல் போன மர்மமான தொடர் குற்றச் சம்பவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன.
இந்தக் குற்றங்களின் பின்னணியில் இருக்கும் மர்ம நபர் யார்? காணாமல் போன சிறுவர்களுக்கு என்ன நடந்தது? தனது கடந்தகால மன உளைச்சல்களையும் தாண்டி அர்ஜுன் தாஸ் இந்த வழக்கில் உண்மையைக் கண்டறிந்தாரா? என்பதே “ஜான் டோ” திரைப்படத்தின் மீதிக்கதை.
சந்துரு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான கம்பீரத்தைக் குறைத்துக்கொண்டு, மனதளவில் பலவீனங்களையும் போராட்டங்களையும் சுமக்கும் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, தந்தையுடனான கடந்தகால அனுபவங்களால் ஏற்படும் மன உளைச்சலை வெளிப்படுத்தும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
சஞ்சனா நடராஜன் காவல்துறை அதிகாரியாக கதாபாத்திரத்திற்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறார். ஸ்ரிஷ்டி, ஜாரா வினீத் சந்தோகே, படவா கோபி, அனுபமா குமார் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு கதைக்களத்தின் மர்மமான சூழலை அழகாகப் பதிவு செய்திருக்கிறது.
முஜீப் மஜீத்தின் பின்னணி இசை பதற்றமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் கச்சிதமாக இருந்திருக்கலாம்.
சிறுவர்கள் காணாமல் போகும் மர்மம், அடையாளம் தெரியாத சடலம், காவல்துறை விசாரணை, குழந்தைப் பருவ மன உளைச்சல் எனப் பல அம்சங்களை ஒன்றிணைத்து வித்தியாசமான உளவியல் கிரைம் த்ரில்லரை வழங்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மதுமிதா.
முதல் பாதியில் அடுத்தடுத்து எழும் கேள்விகளும், விசாரணையில் கிடைக்கும் புதிய தகவல்களும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகம் சற்று குறைகிறது. குறிப்பாக, இறுதியில் வெளிப்படும் மர்மத்திற்கான காரணங்களும் சில கதாபாத்திரங்களின் செயல்பாடுகளும் இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கலாம். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சில திருப்பங்கள் இருந்தாலும், கிளைமாக்ஸ் முழுமையான திருப்தியைத் தரவில்லை.
வித்தியாசமான கதைக்களம், அர்ஜுன் தாஸின் சிறப்பான நடிப்பு, சுவாரஸ்யமான விசாரணை என கவனிக்க வைக்கும் “ஜான் டோ”, திரைக்கதையிலும் கிளைமாக்ஸிலும் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பான த்ரில்லராக அமைந்திருக்கும்.





