“கட்டா குஸ்தி 2” திரை விமர்சனம்

“கட்டா குஸ்தி 2” செல்ல அய்யாவு இயக்கத்தில் ஐசரி கே. கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஷான் ரோல்டன். இந்த படத்தில் ஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனிஷ்காந்த், கருணாகரன், ஜாரா ஜியானா, லிஸ்ஸி ஆண்டனி, ஸ்ரீஜா ரவி, கஜராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முதல் பாகமான “கட்டா குஸ்தி” படத்தின் கதை முடிந்த இடத்திலிருந்தே கதை தொடர்கிறது “கட்டா குஸ்தி 2”

குழந்தை பிறந்த பிறகு தனது மல்யுத்த வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்து வருந்தும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, மீண்டும் போட்டிகளில் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையை கணவர் விஷ்ணு விஷால் ஊட்டுகிறார். மனைவியின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக வீட்டுப் பொறுப்புகள் மற்றும் குழந்தை பராமரிப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவருக்கு உறுதுணையாக நிற்கிறார்.

கணவரின் ஆதரவால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, தேசிய அளவிலான குஸ்தி போட்டிக்காக தீவிரமாக தயாராகிறார். அந்த நேரத்தில், மகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற தகவல் அவரை கவலைப்படுத்துகிறது. மகளின் எதிர்காலத்தை நினைத்து கண்டிப்பாக வளர்க்கத் தொடங்கும் அவர், தனது கனவைப் போலவே மகளையும் குஸ்தி வீராங்கனையாக உருவாக்க முயற்சிக்கிறார். ஆனால் குழந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடக்கும் இந்த முடிவு, கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்குகிறது.

சிறிய கருத்து மோதலாகத் தொடங்கிய பிரச்சனை, குடும்ப உறவையே சோதிக்கும் அளவுக்கு வளர்கிறது. சூழ்நிலைகள் மோசமடைந்து, விவாகரத்து வரை செல்லும் இந்த உறவை மீண்டும் இணைக்க விஷ்ணு விஷால் எடுக்கும் முயற்சிகளும், அதன் முடிவும் தான் “கட்டா குஸ்தி 2” படத்தின் கதை.

முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் இயல்பான நகைச்சுவை நிறைந்திருக்கிறது. ஆனால் அதனுடன் குடும்ப வாழ்க்கை, கணவன்-மனைவி புரிதல், பெற்றோரின் பொறுப்பு போன்ற அம்சங்களையும் சுவாரஸ்யமாக இணைத்து இயக்குநர் செல்லா அய்யாவு திரைக்கதையை அமைத்துள்ளார்.

விஷ்ணு விஷால், மனைவியின் கனவுகளுக்கு துணை நிற்கும் பொறுப்பான கணவராக மனதை கவர்கிறார். குடும்பப் பொறுப்புகளை இயல்பாக சுமக்கும் இல்லத்தரசன் வேடத்திலும், தேவையான இடங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் சிறப்பாக திகழ்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் அவரது நடனமும் உற்சாகமும் ரசிகர்களை கவர்கிறது.

ஐஸ்வர்யா லட்சுமி, இந்தப் படத்தின் உண்மையான பலம். குஸ்தி வீராங்கனையாகவும், அன்பான மனைவியாகவும், கண்டிப்பான தாயாகவும் பல பரிமாணங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உணர்ச்சி வசப்பட்ட காட்சிகளிலும், போட்டி களங்களிலும் அவரது நடிப்பு மிகவும் இயல்பாக அமைந்துள்ளது.

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியின் மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் சாரா, தனது சுறுசுறுப்பான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவருடைய வசன உச்சரிப்பு, முகபாவனைகள் மற்றும் குறும்புத்தனம் படத்திற்கு கூடுதல் சுவை சேர்க்கின்றன.

கருணாஸ் மீண்டும் தனது டைமிங் காமெடியால் சிரிப்பை அள்ளுகிறார். அவரைச் சுற்றி அமைக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. மோக்‌ஷா, முனிஷ்காந்த், காளி வெங்கட், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிறப்பு தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபுவின் திரை இருப்பும் படத்திற்கு கூடுதல் மதிப்பை சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், வண்ணமயமான காட்சிகளால் படத்திற்கு அழகை கூட்டியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் மல்யுத்த காட்சிகள் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன.

ஷான் ரோல்டனின் இசையில் “சம்பவக்காரி” பாடல் திரையில் இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசையும் உணர்ச்சி மற்றும் நகைச்சுவை தருணங்களுக்கு சிறந்த ஆதரவாக அமைகிறது.

பரத் விக்ரமனின் படத்தொகுப்பு எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் திரைக்கதையை வேகமாக நகர்த்துகிறது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியை சுவாரஸ்யமான குடும்பக் கதையாக விரிவுபடுத்திய இயக்குநர் செல்லா அய்யாவு, நகைச்சுவையுடன் சமூகத்தில் பேசப்பட வேண்டிய முக்கியமான கருத்துகளையும் இயல்பாக பதிவு செய்துள்ளார். சில காட்சிகள் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் ரசிக்கத்தக்க கெமிஸ்ட்ரி அந்த குறைகளை மறக்க வைக்கிறது.

குடும்ப உறவுகள், புரிதல், சமத்துவம் ஆகியவற்றை போதனை இல்லாமல், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு பாணியில் சொல்லியிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’, அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நிறைவான கமர்ஷியல் எண்டர்டெய்னராக அமைந்துள்ளது.

“கட்டா குஸ்தி 2” படத்திற்கு மதிப்பீடு 4/5

சிரிப்பும் செண்டிமெண்டும் சமமாக கலந்த குடும்பக் கொண்டாட்டம்