பெரிய கனவுகளை அடைவதற்கு அதிகமான பணமோ, பொருளாதாரப் பின்னணியோ அவசியமில்லை. ஒரு நல்ல யோசனை மீது நம்பிக்கையும், அதைச் செயல்படுத்தும் துணிச்சலும் விடாமுயற்சியும் இருந்தால் சாதிக்க முடியும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பீட்சா பாய்ஸ்’.
வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் தேடி தமிழகத்தின் கிராமப்புறங்களிலிருந்து பெங்களூருவுக்குச் செல்லும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. புதிய நகரம், அறிமுகமில்லாத மனிதர்கள், எதிர்பாராத சவால்கள் எனப் பல தடைகளைச் சந்திக்கும் அவர்கள், தங்களுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கப் போராடும் கதையை நட்பு, நகைச்சுவை, லட்சியம் மற்றும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் வேலை தேடி பெங்களூருவுக்கு வருகின்றனர். அங்கு பீட்சா உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேரும் அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சினைகள் உருவாகின்றன. உணவக முதலாளியுடன் ஏற்படும் மோதல் அவர்களைப் புதிய சிக்கல்களுக்குள் தள்ளுகிறது. இந்தச் சூழலில், அவர்களில் ஒருவர் எவ்வித முதலீடும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் சொந்தமாக ஒரு பீட்சா சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவை முன்வைக்கிறார். அந்த இலக்கை அடைவதற்காக நண்பர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள், கிடைக்கும் எதிர்பாராத உதவிகள் எனப் பல திருப்பங்களுடன் நகர்கிறது ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் கதை.
படம் குறித்து இயக்குநர் சேகர் கேசவ் சிரின் பகிர்ந்து கொண்டதாவது,
“பெங்களூருவில் தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்க முயற்சிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும்தான் ’பீட்சா பாய்ஸ்’ படத்தின் கதை. நட்பு மற்றும் லட்சியத்தை மையமாகக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டிருந்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி வேறு மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக மக்களின் சிரமங்களையும் இப்படம் பேசும்.
நான் பிறந்து வளர்ந்த மகாராஷ்டிராவில்கூட இதுபோன்ற வெறுப்புணர்வை நேரடியாக எதிர்கொண்டிருக்கிறேன். அந்த அனுபவங்கள், சொந்த மாநிலத்தை விட்டு வெளியே செல்லும் நம் மக்களைப் பிற மாநிலங்களில் எப்படிப் பார்க்கிறார்கள், அவர்கள் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவின. அந்த யதார்த்தங்களின் ஒரு பகுதியை, படத்தின் பொழுதுபோக்கு அம்சம் குறையாமல் திரையில் கொண்டுவர விரும்பினேன். எளிமையாகச் சொல்வதென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் வாழ்க்கை, ஆசைகள் மற்றும் போராட்டங்களைப் பற்றிய படம்தான் இது” என்றார்.
தமிழ் மொழி மீதான தனது பற்றையும், திரைப்பட உருவாக்க அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட அவர் மேலும் கூறுகையில்,
“நான் வட இந்தியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஒரு தமிழ் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எனது பெற்றோர் வீட்டில் எப்போதும் தமிழில் தான் பேசுவார்கள். அதனால், தமிழ் மொழி மீதான எனது பற்று ஆண்டுகள் செல்லச் செல்ல அதிகரித்தது. ஒரு தமிழ் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது எப்போதும் எனது கனவாக இருந்தது. அந்த வகையில் பீட்சா பாய்ஸ் திரைப்படம் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். பெங்களூருவில் படப்பிடிப்பு நடைபெற்றபோது வானிலை சார்ந்த சில சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இருப்பினும், ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒன்றிணைந்து செயல்பட்டோம். அந்தப் பயணத்தில் எங்களுக்குள் ஒரு குடும்பம் போன்ற நெருக்கம் உருவானது. படத்தின் உணர்வுகளையும் அதன் பின்னணியில் உள்ள யதார்த்தங்களையும் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்” என்றார்.
‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் சிவம் சங்கர் நடிகராக அறிமுகமாகிறார். சரத் லோகிதாஸ்வா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காவல் ஆய்வாளர் நாகராஜ் என்ற முக்கியமான வேடத்தில் பிரபல நடிகர் ஷோப்ராஜ் நடித்திருக்கிறார்.
செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் இணைந்து தயாரித்துள்ளனர். கதை, இயக்கம் மற்றும் இசைப் பொறுப்புகளை சேகர் கேசவ் சிரின் ஏற்றுள்ளார். குருபிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முழுப் படப்பிடிப்பும் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. காந்தீரவா ஸ்டுடியோஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு 42 நாட்களில் நிறைவடைந்துள்ளது.
நட்பு, இளமை, கனவு, போராட்டம் எனப் பல அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள ‘பீட்சா பாய்ஸ்’, வசதிகளும் வாய்ப்புகளும் குறைவாக இருந்தாலும் பெரிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கத் துணியும் இளைஞர்களின் மன உறுதியை வெளிப்படுத்தும் திரைப்படமாக உருவாகியுள்ளது. அறிமுகமில்லாத நகரத்தில் வாழ்க்கையைத் தொடங்கி, தங்களின் உழைப்பால் புதிய பாதையை உருவாக்க நினைக்கும் இளைஞர்களின் நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கொண்டாடும் படமாக இது ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.





