‘அரசியலையும் நாகரிகமாக நடத்தியவர்’ – ஆர்.எம்.வீரப்பன் நூற்றாண்டு விழாவில் புகழாரம்!

தமிழக அரசியலிலும் தமிழ் திரையுலகிலும் தனக்கென அழியாத தடம் பதித்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் கோலாகலமாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல், சினிமா, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு, ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் வாழ்க்கை, திரைத்துறை சாதனைகள் மற்றும் அவரது தனிப்பட்ட பண்புகளை நினைவுகூர்ந்தனர்.

திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களான பெரியார், அண்ணா உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து விலகி அதிமுகவை தொடங்கியபோது, அவருடன் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் இடம்பெற்ற ஆர்.எம்.வீரப்பன், 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் ஐந்து முறை தமிழக அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியல் களத்தில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறையிலும் ஆர்.எம்.வீரப்பனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள இவர், 20-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். இதனால் திரையுலகில் அவர் அன்புடன் ‘திரைக்கதை சித்தர்’ என அழைக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். நடித்த காலகட்டத்தில் தொடங்கி, பல தலைமுறை தமிழ் சினிமாவிலும் தயாரிப்பாளராகவும், கதாசிரியராகவும் தனது தனி முத்திரையைப் பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன். ‘ரிக்ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத் தாய்’ உள்ளிட்ட படங்களின் மூலம் எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதேபோல், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் வழங்கியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இதன் மூலம் அரசியலிலும் திரைத்துறையிலும் ஒரே நேரத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்டிய தனித்துவமான ஆளுமையாக ஆர்.எம்.வீரப்பன் திகழ்ந்தார்.

ஆர்.எம்.வீரப்பனின் மருமகனான டி.ஜி.தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். எம்.ஜி.ஆர். காலம் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ், வர்த்தக ரீதியான வெற்றியுடன் தரமான படைப்புகளையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஆர்.எம்.வீரப்பன் உருவாக்கிய திரைத்துறை பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக டி.ஜி.தியாகராஜனின் தயாரிப்புப் பயணமும் அமைந்துள்ளது. இதன் பின்னணியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவை அவர் முன்னின்று ஒருங்கிணைத்தார். விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலக, அரசியல் பிரபலங்களை வரவேற்று அவர் உரையாற்றினார்.

விழாவில் சென்னை கம்பன் கழகத் தலைவரும் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசுகையில்,

“அரசியலில் ஆர்.எம்.வீ. போல் தூய்மையானவரைப் பார்க்க முடியாது. மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அவருடைய நினைவுகளைப் பகிரும்போதும், அவர் நம்மிடையே இல்லையே என்ற குறை உள்ளது” என்றார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம் பேசும்போது,

ஆர்.எம்.வீரப்பனுக்கு ‘அரசியல் சாணக்கியர்’ என்ற பெயர் இருந்ததாகவும், அதைக் கடந்து ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில்,

இன்றைய தலைமுறையினர் தியாகம், அன்பு, தனிமனித ஒழுக்கம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பதாகவும், ஆனால் ஆர்.எம்.வீரப்பன் இவை அனைத்திலும் சிறந்து விளங்கியவர் என்றும் தெரிவித்தார். அவருடன் இருந்தவர்களையும் ஒழுக்கசீலர்களாக உருவாக்கிய பெருமை அவரையே சேரும் என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசு, ஆர்.எம்.வீரப்பன் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில்,

“இன்று அரசியலில் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் அரசியலையும் நாகரிகமாக நடத்தியவர் ஆர்.எம்.வீ. அவரைப் போன்ற அரசியல்வாதியை உருவாக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆர். கழக பொதுச்செயலாளர் ராமலிங்கம், இயக்குநர் பி.வாசு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம், சென்னை கம்பன் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அரசியலில் நேர்மை, நாகரிகம், ஒழுக்கம் ஆகியவற்றை முன்னிறுத்திய அரசியல்வாதியாகவும், பல வெற்றிப் படங்களை உருவாக்கிய தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்கிய ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, அவரது நினைவுகளைப் போற்றும் நிகழ்வாக மட்டுமல்லாமல், அவரது வாழ்வியல் கொள்கைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.