திரையரங்குகளில் படம் பார்த்து முடித்த பிறகும் அதன் கதையும் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் நினைவுகளில் தொடர்ந்து பயணிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டில் ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்ற காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’, வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே, அதன் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘ஹைக்கூ’ தற்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையத் தயாராகியுள்ளது.
படம் குறித்து நடிகர் ஏகன் பகிர்ந்து கொண்டதாவது,
“’ஹைக்கூ’ திரைப்படத்துக்கு பலதரப்பட்ட ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எங்களை நெகிழ செய்தது. உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஒரு திரைப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. ஆனால், திரையரங்குகளுக்குச் சென்றபோது வயதானவர்கள்கூட இப்படத்துடன் தங்களை தொடர்புபடுத்தி பாராட்டியது மகிழ்ச்சியளித்தது. தற்போது நெட்ஃபிலிக்ஸ் மூலம் ஹைக்கூ திரைப்படம் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்றடைவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் திரைப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நெட்ஃபிலிக்ஸ் தளத்துக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.
தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறுகையில், “ஹைக்கூ திரைப்படம் எங்களுக்கு மகிழ்ச்சியான மனநிறைவான அனுபவம் தந்தது. இப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீட்டுக்காக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். திரையரங்குகளில் படம் வெளியான பிறகு இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காத பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. தற்போது அவர்கள் எங்கிருந்தாலும், சிறந்த ஒளி மற்றும் ஒலி தரத்தில் இப்படத்தை ரசிக்கும் வாய்ப்பை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி” என்றனர்.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘ஹைக்கூ’, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. உணர்வுப்பூர்வமான கதைக்களம், நுட்பமான திரைக்கதை அமைப்பு மற்றும் சித்து குமாரின் மனதை வருடும் இசை ஆகியவை படத்தின் முக்கிய பலமாக அமைந்தன.
திரையரங்குகளில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தை வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் உலகம் முழுவதும் கண்டு ரசிக்கலாம்.





