‘23-ம் புலிகேசி’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘புலி’, ‘கசடதபற’, ‘போட்’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான களத்தையும் தனித்துவமான கற்பனை உலகத்தையும் திரையில் படைத்த இயக்குநர் சிம்புதேவன், தற்போது தனது ஒன்பதாவது திரைப்படமாக ‘நவோரியா’வை உருவாக்கி வருகிறார். டி.பி.சி. ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் இப்படத்தைத் தயாரிக்கிறார். சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தயாரிப்பில் இணைந்துள்ளது.
நகைச்சுவை, ஆக்ஷன், ஃபேண்டஸி என மூன்று முக்கிய அம்சங்களையும் ஒன்றிணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான முழுநீள பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘நவோரியா’ உருவாகி வருகிறது.
இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். மேலும் ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 60 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கதையின் முக்கியமான காட்சிகளைப் படமாக்குவதற்காகச் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, அங்கு சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
பெரிய பொருட்செலவில் தயாராகி வரும் ‘நவோரியா’, நடிகர் விமலின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் உருவாக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள விமல், இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார்.
இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சக்தீ வெங்கட்ராஜ் எம் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.
வித்தியாசமான கற்பனை, கலகலப்பான நகைச்சுவை, அதிரடியான சண்டைக் காட்சிகள் என ரசிகர்களுக்கு முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் ‘நவோரியா’ தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.





