“மகுடம்” திரை விமர்சனம்

“மகுடம்” விஷால் இயக்கத்தில் ஆர்.பி. சௌத்ரி, ஜீவா, ஜிதான் ரமேஷ், பி. சுரேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த படத்தில் விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘மகுடம்’ ஒரு ஆக்‌ஷன்–குடும்பப் பின்னணியிலான பழிவாங்கும் கதை. அமைதியான நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ விரும்பும் மகன் விஷால், மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் சாதாரண வாழ்க்கை நடத்துகிறார். ஆனால், அவரது கடந்த காலமும் குடும்பத்தின் பின்னணியும் மீண்டும் அவரைத் தேடி வர, அவரது வாழ்க்கை எதிர்பாராத விதமாக மாறுகிறது.

அப்பா விஷால் செல்வாக்கும் ஆபத்தும் நிறைந்த கேங்ஸ்டர். மகன் தனது வழியைத் தேர்ந்தெடுத்து அமைதியாக வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால், பழைய பகையும் கேங்ஸ்டர் மோதல்களும் மீண்டும் தலைதூக்கும்போது, மகன் விஷாலும் அந்த வன்முறை உலகத்திற்குள் இழுக்கப்படுகிறார்.

மகனைப் பாதுகாப்பதற்காக தந்தை தனது பழைய உலகத்திற்குத் திரும்புகிறாரா? அல்லது தனது குடும்பத்தை காப்பாற்ற மகன் விஷாலே வன்முறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறதா? என்பதுதான் “மகுடம்” படத்தின் கதை.

விஷாலின் இயக்குநர் அறிமுகமாக உருவாகியுள்ள ‘மகுடம்’, மாஸ் ஆக்‌ஷன், குடும்ப உணர்வு, காதல், பழிவாங்கல் என ஏற்கனவே பலமுறை பார்த்த அம்சங்களையே மீண்டும் பயன்படுத்துகிறது. படத்தின் கதை புதிதாக எதையும் சொல்லாமல் பழைய காலத்து கமர்ஷியல் படங்களின் பாணியை நினைவுபடுத்துகிறது

முக்கியமாக, முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்வது படத்தின் மிகப்பெரிய குறையாக உள்ளது. சுமார் 3 மணி நேரம் 5 நிமிடங்கள் கொண்டிருப்பதால், சில காட்சிகளை கத்தரித்திருக்கலாம்.

விஷால் பல கதாபாத்திரங்களில் தோன்றியிருப்பது ரசிகர்களுக்கு மாஸ் தருணங்களை வழங்கினாலும், கதாபாத்திரங்களின் எண்ணிக்கையும் வழக்கமான கமர்ஷியல் டெம்ப்ளேட்டும் படத்தின் புதுமையை குறைக்கின்றன. இரட்டை வேடம், இரண்டு கதாநாயகிகள், குடும்ப சென்டிமென்ட், பழைய பாடலை ரீமேக் செய்வது போன்ற பல அம்சங்கள் ஒரே படத்தில் இடம்பெறுவது சற்று ஓவர்லோடாக உணரப்படுகிறது.

அப்பா விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலியின் நடிப்பு எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. குறிப்பாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு சற்று செயற்கையாகத் தோன்றுவதுடன், கதாபாத்திரத்தின் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தத் தவறியதாக தெரிகிறது.

மகன் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் துஷாரா விஜயனின் நடிப்பு ஓரளவு சிறப்பாக அமைந்துள்ளது. ஜமுனா கதாபாத்திரத்தின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த முயற்சித்திருப்பது தெரிகிறது. குறிப்பாக குடும்பம் தொடர்பான காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. இருப்பினும், கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படாததால், துஷாராவின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சில ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னணி இசை சத்தமாக இருந்தாலும், காட்சிகளின் உணர்வை உயர்த்தும் வகையில் மனதில் பதியும் அளவுக்கு அமையவில்லை. பாடல்களும் கதையின் ஓட்டத்திற்கு பெரிய பலமாக தெரியவில்லை. குறிப்பாக சில காட்சிகளில் BGM தேவையற்ற அளவுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதால், காட்சியின் இயல்பான உணர்வு பாதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, படத்தின் பிரம்மாண்டத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ற இசை அனுபவத்தை வழங்கத் தவறியுள்ளது.

மேலும், படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சில காட்சியமைப்புகள் தரத்தில் தடுமாறுகின்றன. கதையின் பிரம்மாண்டத்தை அதிகரிக்க முயற்சித்தாலும், சில காட்சிகள் அதற்கு மாறாக செயற்கையான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

மொத்தத்தில், மாஸ் தருணங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் தெரிந்தாலும், பழக்கமான கதைக்களம், நீளமான திரைக்கதை, மெதுவான முதல் பாதி மற்றும் சில செயற்கையான காட்சிகள் காரணமாக விஷால் ரசிகர்களுக்கு ‘மகுடம்’ ஒரு ஏமாற்றமே

“மகுடம்” படத்திற்கு மதிப்பீடு 2/5

“மகுடம்” எதிர்பார்த்த உயரத்தை எட்டத் தவறுகிறது.