“மொத ராத்திரி” ராஜா கருப்பசாமி இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசை பாரத் சங்கர். இந்த படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட இருவர் — ஒருபுறம் ‘துபாய் மாப்பிள்ளை’ என்ற கெத்தான இளைஞர், மறுபுறம் அமைதியும் அடக்கமும் நிறைந்த பெண். இவர்களுக்கிடையே எதிர்பாராத விதமாக திருமணம் நடக்கிறது. புதிய வாழ்க்கையைத் தொடங்கும் அந்தத் திருமண இரவே, அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய குழப்பத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
திருமணத்துக்கு முன்பு நடந்த விஷயங்கள், திருமணத்திற்குப் பிறகு வெளிவரும் மறைக்கப்பட்ட உண்மைகள், குடும்பத்தினருக்குள் ஏற்படும் குழப்பங்கள் என இரவு முழுவதும் அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஒரு கட்டத்தில் யார் சொல்வது உண்மை, யார் மறைப்பது பொய் என்ற குழப்பம் உருவாகிறது. இந்தக் குழப்பங்களை நகைச்சுவையுடன் கடந்து செல்லும் விதமே “மொத ராத்திரி” படத்தின் கதை.
ரிஷிகாந்த் துபாய் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவரது உடல்மொழியும், நகைச்சுவை காட்சிகளில் வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பும் ரசிக்க வைக்கின்றன. மறுபுறம், அனிஷ்மா அனில்குமார் அமைதியான மணப்பெண் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, கதையின் போக்கில் அவரது கதாபாத்திரத்தில் வெளிப்படும் மாற்றங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.
படத்தை இயக்கி நடித்திருக்கிறார் ராஜா கருப்பசாமி, ஒரே இரவை மையமாக வைத்து கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது. திருமணம் என்ற குடும்பப் பின்னணிக்குள் பொய், ரகசியங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை அழகாக இணைத்திருப்பது படத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு சம்பவத்திற்குப் பின்னாலும் அடுத்தடுத்து உருவாகும் குழப்பங்கள், கதையின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன.
பூசாரி வேடத்தில் சேத்தன், கிராமத்து மக்களின் குலதெய்வ நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் தோன்றுகிறார். சேத்தனின் இயல்பான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு, பூசாரி கதாபாத்திரத்திற்கு நகைச்சுவை கலந்த தனித்துவத்தை கொடுக்கிறது. திருமணம், குலதெய்வ நம்பிக்கை, குடும்ப உறவுகள் ஆகியவற்றை இணைக்கும் இந்தக் கதாபாத்திரம், படத்தின் முக்கிய துணைக் கதாபாத்திரங்களில் ஒன்றாக அமைகிறது.
படத்தின் கிராமத்து பின்னணிக்கு ஏற்ப சுரேந்திரன் பரஞ்சோதியின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு இயல்பான தோற்றத்தை வழங்குகிறது.
பரத் சங்கரின் இசை கதையின் மனநிலைக்கு ஏற்ற வகையில் பயணிக்கிறது. பல கதாபாத்திரங்கள் ஒன்றாக இணையும் காட்சிகளில் எடிட்டிங் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒரு பெண் தனது திருமண வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் ஏற்படும் பயம், பதற்றம், எதிர்பார்ப்பு மற்றும் சந்தேகங்களை, இயக்குநர் மிகவும் இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.
படத்தின் முதல் பாதி கலகலப்பாக ரசிக்கும்படியாக சென்றாலும் இரண்டாம் பாதி சற்று தொய்வாக இருப்பது படத்திற்கு மைனஸ்
மொத்தத்தில், வழக்கமான காதல் அல்லது திருமணக் கதையாக இல்லாமல், “ஒரு திருமணம்… ஒரு இரவு… பல ரகசியங்கள்… எதிர்பாராத குழப்பங்கள்” என்ற சுவாரஸ்யமான அம்சத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள எண்டர்டெயினர் திரைப்படமாக மொத ராத்திரி அமைகிறது. குடும்பப் பின்னணியில் நகைச்சுவையுடன் திருப்பங்களை ரசிக்க விரும்புபவர்களுக்கு படம் நல்ல பொழுதுபோக்காக அமையக்கூடும்.





