“சம்ஹாரம்” திரை விமர்சனம்

“சம்ஹாரம்” ராம் பிரபா இயக்கத்தில் N. அனில் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை வி. ஜி. ஹரி கிருஷ்ணன். இந்த படத்தில் பிரஜின் பத்மநாபன், நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், சாரு நிஷா, எஸ். ராஜ்குமார், தென்றல் ராஜாமற்றும் பலர் நடித்துள்ளனர்.

தனது தங்கையின் திருமணத்தை நடத்தத் தீவிரமாக இருக்கும் பிரஜின், குடும்பத்துடன் ஒரு பெரிய வீட்டில் தங்கியிருக்கிறார். ஆனால் திருமணத்தில் விருப்பமில்லாத அவரது தங்கை, காதலனுடன் தப்பிச் செல்ல திட்டமிடுகிறார். இதற்கிடையில், அடைக்கலம் தேடி ஒரு தந்தையும் மகளும் அந்த வீட்டிற்கு வருகிறார்கள்.

ஒரே இரவில் அந்த வீட்டில் பல மர்ம சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. திருமணம் நடக்குமா, கொலை நடைபெறுமா, யார் உண்மையான குற்றவாளி என்ற கேள்விகளுடன் கதை பரபரப்பாக நகர்கிறது. இறுதியில், பல அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதுதான் “சம்ஹாரம்” படத்தின் கதை.

தனது தங்கையின் திருமணத்தை எந்த சூழ்நிலையிலும் நடத்தி முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் பிரஜின், குடும்பத்தின் தலைவனாக பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கதாபாத்திரம் நல்லவரா, கெட்டவரா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது கதைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை தருகிறது.

திருமணத்தில் விருப்பமில்லாமல் காதலனுடன் தப்பிச் செல்ல முயற்சிக்கும் இளம் பெண்ணாக ஷருமிஷா இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். காதல், பயம், பதற்றம் என பல்வேறு உணர்வுகளை திறம்பட வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

வில்லன் வேடத்தில் நடித்துள்ள கணேஷ் சாவரட்டில், தனது தோற்றம் மற்றும் நடிப்பின் மூலம் கதைக்கு தேவையான அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார். அவரது திரை தோற்றம் பல காட்சிகளில் பதற்றத்தை அதிகரிக்கிறது.

நியா வர்கீஸ், ராஜ்குமார், தென்றல் ராஜா உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக கையாண்டுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம், ஒரே வீட்டை மையமாகக் கொண்ட கதையை சலிப்பில்லாமல் பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளார். இரவு நேரத்தில் நடைபெறும் சம்பவங்களின் பரபரப்பை காட்சிகளின் மூலம் உணர வைக்கிறார்.

இசையமைப்பாளர் வி.ஜி. ஹரிகிருஷ்ணனின் பின்னணி இசை திரில்லர் உணர்வை உயர்த்த உதவினாலும், சில இடங்களில் அதிகப்படியான ஒலியால் காட்சிகளை மீறிச் செல்லும் உணர்வை ஏற்படுத்துகிறது.

படத்தொகுப்பாளர் ராம்நாத், கதையின் வேகத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் படத்தை சுருக்கமாக நகர்த்தியுள்ளார். இதனால் படம் தேவையற்ற நீளத்தை தவிர்க்கிறது.

எழுத்து மற்றும் இயக்கத்தை கவனித்துள்ள ராம் பிரபா, ஒரு இரவில் நடைபெறும் சம்பவங்களை பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையாக வடிவமைத்து, கடைசி வரை சுவாரஸ்யத்தை தக்க வைத்திருக்கிறார். சில லாஜிக் குறைகள் இருந்தாலும், தொடர்ந்து வரும் திருப்பங்களும் மர்ம முடிச்சுகளும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

 

“சம்ஹாரம்” படத்திற்கு மதிப்பீடு 3/5

கடைசி வரை விறுவிறுப்பை தக்கவைக்கும் திரில்லர் “சம்ஹாரம்”.