“ராம் அன்ட் லீலா” திரை விமர்சனம்

“ராம் இன் லீலா” ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ஆர். ரவீந்திரன், சுதர்சன் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசைஅங்கித் மேனன்..இந்த படத்தில் ரியோ ராஜ், வர்திகா ஜெயின், சேதன் கடம்பி, முனிஷ்காந்த், மாலவிகா அவினாஷ், தீபா வெங்கட், மா கா பா ஆனந்த், பாலாஜி தியாகராஜன் தயாலன், தாஃபியா அபு, கவின் ஜிடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திருமண வயதைத் தாண்டியும் பெண் கிடைக்காமல் தவிக்கும் ரியோ, வர்டிகா வர்டிகா மீது காதல் கொள்கிறார். ஆனால், வர்டிகா தினமும் மாலை 6 மணிக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற வித்தியாசமான நிபந்தனையை முன்வைக்கிறார். காதலில் மூழ்கியிருக்கும் ராம், அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல 6 மணி நிபந்தனை அவருக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இதனால், வர்டிகா ஏன் மாலை 6 மணிக்குப் பிறகு வெளியே வருவதில்லை என்ற ரகசியத்தை தெரிந்துகொள்ள ராம் முயற்சிக்கிறார். ஆரம்பத்தில் ‘சின்னதம்பி’ படத்தில் கவுண்டமணி கதாபாத்திரத்திற்கு இருந்ததைப் போன்ற ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதை, பின்னர் முற்றிலும் வேறொரு காரணத்தை வெளிப்படுத்துகிறது. அந்த பிரச்சனை என்ன, அதை தெரிந்த பிறகும் ராம் வர்டிகாவை காதலித்தாரா, இவர்களின் திருமணம் நடந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.

திருமணத்திற்காக ஏங்கும் அப்பாவி இளைஞராக ரியோ நடித்திருக்கிறார். காதல், குழப்பம், பதற்றம் என கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை காமெடி கலந்து வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். பெண்கள் உலகம் பற்றி அதிகம் தெரியாத அப்பாவியாக அவர் செய்யும் சில சேட்டைகள் சிரிக்க வைக்கின்றன.

காதலுக்காக ஏங்குவது, எதிர்பாராத பிரச்சனையில் சிக்குவது, அதைத் தீர்க்க போராடுவது என கதையின் பெரும்பாலான பகுதிகளை ரியோ தாங்கிச் செல்கிறார். குறிப்பாக அவரது உடல்மொழியும் சில காமெடி காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. இருப்பினும், சில இடங்களில் அவரது நடிப்பு சற்று ஓவர் டோஸாகத் தெரிகிறது. சில காட்சிகளில் அவரது நடிப்பு, ஆரம்பகால சிவகார்த்திகேயனின் காமெடி பாணியை நினைவுபடுத்துகிறது.

அறிமுக நடிகை வர்டிகா, தோற்றத்தில் அழகாகவும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவும் இருக்கிறார். ஆனால், கதையின் மையத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சனையைச் சுற்றியே அவரது கதாபாத்திரம் அமைந்திருந்தாலும், நடிப்புக்கான வாய்ப்பு ரியோவுடன் ஒப்பிடும்போது குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகளில் அவரை அழகான கதாநாயகியாக மட்டுமே முன்னிறுத்தியிருப்பது ஒரு குறையாக தெரிகிறது.

ரியோவின் தந்தையாக வரும் சேத்தன், தாயாக மாளவிகா அவினாஷ், தங்கையாக தாஃபியா அபு, மாமனாக முனீஷ்காந்த், நண்பராக பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

அதேபோல், வர்டிகாவின் தாயாக வரும் தீபா வெங்கட், மாமாவாக மாகாபா மற்றும் தாத்தாவாக காத்தாடி ராமமூர்த்தி ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். இவர்களின் கதாபாத்திரங்கள் படத்தின் நகைச்சுவை அம்சத்திற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.

மல்லிகார்ஜுனின் ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தை வழங்குகிறது. குறிப்பாக கதாநாயகியை அழகாகவும், பிரகாசமாகவும் காட்டுவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காதல் காட்சிகளும் குடும்பப் பின்னணியும் கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் மாண்டேஜ் காட்சிகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பாடல்கள் எளிதில் மனதில் பதியும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தக்கூடிய மெலடிகள் இடம்பெற்றுள்ளன.

பின்னணி இசையும் பாடல்களின் மெலோடி தன்மையைப் பின்பற்றி இதமாக பயணிக்கிறது. பெரிய அளவில் சத்தம் போடாமல் காட்சிகளின் உணர்வுக்கு ஏற்ற வகையில் இசை அமைந்துள்ளது.

ஒய்.என்.சி. சிவாவின் படத்தொகுப்பு முதல் பாதியில் சற்று மெதுவாக இருப்பது படத்தின் வேகத்தை குறைக்கிறது. குறிப்பாக கதாநாயகியின் ‘6 மணி’ ரகசியத்தைச் சுற்றிய காட்சிகள் சில இடங்களில் நீளமாகத் தோன்றுகின்றன.

ஆனால், இரண்டாம் பாதியில் படம் வேகம் எடுப்பதுடன், காமெடி காட்சிகளை சரியான இடத்தில் இணைத்து படத்தை கலகலப்பாக நகர்த்தியிருப்பது சிறப்பு.

எழுதி இயக்கியுள்ள ராமச்சந்திரன் கண்ணன், ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்திருக்கக்கூடிய காதல் மற்றும் குடும்பக் களத்திற்குள் வித்தியாசமான ஒரு பிரச்சனையை வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார்.

கதையின் மையக்கரு வேறு ஒரு படைப்பை நினைவுபடுத்தும் வகையில் இருந்தாலும், அதை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி, காமெடி மற்றும் குடும்ப உணர்வுகளுடன் பயணிக்க வைத்திருப்பது இயக்குநரின் பலம்.

குறிப்பாக வர்டிகாவின் பிரச்சனை என்ன என்பது வெளிப்படும் இடம் வரை படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார். அந்தப் பிரச்சனைக்கான பின்னணியை விளக்கும் விதமும், அதன் காரணமாக காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்களும் திரைக்கதைக்கு வலு சேர்க்கின்றன.

பிரச்சனை தெரிந்த பிறகு காதல் எந்த நிலையில் தொடர்கிறது, அதைத் தாண்டி இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக கையாண்டிருப்பது படத்தின் முக்கியமான பலம். அதே நேரத்தில் திருமணத்தைச் சுற்றி உருவாகும் காமெடி காட்சிகள் படத்தின் சீரியஸ் தன்மையை குறைத்து, குடும்பத்துடன் சிரித்து ரசிக்கக்கூடிய தருணங்களை உருவாக்குகின்றன.

படத்தின் முதல் பாதி சில இடங்களில் மெதுவாக நகர்கிறது. ரியோவின் காமெடி சில காட்சிகளில் அளவுக்கு அதிகமாகத் தோன்றுகிறது. வர்டிகா போன்ற முக்கிய கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிகமான நடிப்பு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

மேலும், கதையின் மையக்கரு புதிதாக இருந்தாலும், அதன் அடிப்படை சில இடங்களில் ஏற்கனவே பார்த்த திரைப்படங்களின் சாயலை ஏற்படுத்துகிறது. சில திருப்பங்களையும் பார்வையாளர்கள் முன்கூட்டியே கணிக்கும் வாய்ப்பு உள்ளது.

காதல், குடும்பம் மற்றும் ஒரு வித்தியாசமான பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ராம் & லீலா’, பெரிய அளவில் புதுமையான திரைப்படமாக இல்லாவிட்டாலும், அதன் மையக் கருத்தையும் காமெடியையும் சரியாக கலந்து கொடுத்திருப்பதால் ரசிக்க வைக்கிறது.

ரியோவின் காமெடி கலந்த நடிப்பு, வர்டிகாவின் கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, குடும்பக் காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதியில் வரும் கலகலப்பான சம்பவங்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

“ராம் அன்ட் லீலா” படத்திற்கு மதிப்பீடு 3/5

சில குறைகள் இருந்தாலும், சிரித்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம்