விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள உணர்வுப்பூர்வமான குடும்பத் திரைப்படமான ‘நூறு சாமி’, ZEE5 ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 7, 2026 அன்று தமிழ் ZEE5-ல் வெளியான இப்படம், குடும்ப உறவுகள், தாய்மை, காதல் மற்றும் வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பு போன்ற உணர்வுபூர்வமான அம்சங்களை மையமாகக் கொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
உண்மைச் சம்பவங்களின் தாக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சசி எழுதி இயக்கியுள்ளார். பல ஆண்டுகளாக குடும்பத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தாய், தனது வாழ்க்கையில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க விரும்பும் சூழலை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. தனக்கான மகிழ்ச்சியைத் தேர்வு செய்வதா, குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்குள் வாழ்வதா என்ற கேள்வியை கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது.
விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயல்பான நடிப்பு மற்றும் உணர்வுகளை மையப்படுத்திய கதை சொல்லல் ஆகியவை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் ZEE5 தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பல்வேறு மொழி ரசிகர்களையும் ‘நூறு சாமி’ சென்றடைந்துள்ளது.
படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து ZEE5 தமிழ் & மலையாளம் பிரிவின் வணிகத் தலைவர் லாய்ட் சேவியர் கூறுகையில், குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியைத் தேடும் மனிதர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு பார்வையாளர்கள் அளித்திருக்கும் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது, குறிப்பாக பிராந்திய உணர்வுபூர்வமான கதைக்கு கிடைத்துள்ள முக்கியமான சாதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நன்றியைத் தெரிவித்த இயக்குநர் சசி கூறுகையில்,
“நூறு சாமி திரைப்படத்திற்கு ZEE5-இல் பார்வையாளர்களிடமிருந்து இவ்வளவு அன்பு கிடைப்பதைப் பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நேர்மையுடனும் உணர்வுடனும் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த கதை இத்தனை பேருடன் இணைந்து, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது என்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம். இந்த திரைப்படத்தை பார்த்து, ஆதரித்து, அன்பைப் பகிர்ந்த அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றார்.
திரையரங்க வெளியீட்டைக் கடந்தும், ஓடிடி தளத்தில் புதிய ரசிகர்களை உருவாக்கி வரும் ‘நூறு சாமி’, குடும்ப உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட பிராந்திய திரைப்படங்களுக்கு டிஜிட்டல் தளங்களில் இருக்கும் வரவேற்பை மீண்டும் நிரூபித்துள்ளது.
‘நூறு சாமி’ தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.





