சென்னை, ஜூலை 24, 2026: நடிகர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ZEE5 OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் துல்லியமான வெளியீட்டு தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, சமீபத்தில் OTT-யில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பரிமளா & கோ’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. ஜெயராம், ஊர்வசி நடித்த அந்த திரைப்படம், குடும்ப பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து, நகைச்சுவை மற்றும் வாழ்வியலோடு தொடர்புபடுத்தக்கூடிய கதைக்களத்தின் மூலம் ZEE5-இன் முக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. இதன் மூலம், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய தரமான படைப்புகளை வழங்கும் தனது நோக்கத்தை ZEE5 தமிழ் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, தற்போது உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட ‘நூறு சாமி’ திரைப்படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தனது மகனுக்காகவும் குடும்பத்திற்காகவும் பல ஆண்டுகள் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு விதவை தாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. வாழ்க்கையின் நடுப்பகுதியில் மீண்டும் திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் அந்தத் தாய், குடும்பத்தினரும் சமூகமும் ஏற்படுத்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்வதே கதையின் மையம்.
தாய்–மகன் உறவை மிக ஆழமாக பதிவு செய்யும் இந்த திரைப்படத்தில், தாயின் தியாகங்களை புரிந்துகொள்ளும் மகன், சமூகத்தின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தனது தாயின் மகிழ்ச்சிக்காக உறுதுணையாக நிற்பது முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. இதன் மூலம் வழக்கமான குடும்பக் கதைகளைத் தாண்டி, புதிய கோணத்தில் தாய்–மகன் பாசத்தை படம் வெளிப்படுத்துகிறது.
பெண்களின் வாழ்க்கை, மறுமணம், தாய்மை, தியாகம், குடும்ப உறவுகள் மற்றும் சமூகத்தின் பார்வை போன்ற பல்வேறு உணர்வுபூர்வமான அம்சங்களை இப்படம் ஆராய்கிறது. இதனால் பல தலைமுறை பார்வையாளர்களுக்கும் தொடர்புபடுத்தக்கூடிய படைப்பாக இது உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் வெளியானபோது, ஆரம்பத்தில் மிதமான வரவேற்பைப் பெற்ற இப்படம், நேர்மறையான வாய்மொழி விமர்சனங்களால் தொடர்ந்து பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடியது. குறிப்பாக அதன் உணர்ச்சிகரமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
இதுகுறித்து தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் மற்றும் தமிழ் & மலையாள வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் பேசியதாவது:
“இன்றைய பார்வையாளர்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டுமல்லாமல், சமூகத்தில் உருவாகி வரும் மாற்றங்களை பிரதிபலிக்கும், சிந்திக்க வைக்கும் கதைகளையும் எதிர்பார்க்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ‘நூறு சாமி’ அப்படிப்பட்ட திரைப்படமாகும். ஆழமான பிராந்திய பின்னணியைக் கொண்ட கதையை, முன்னோக்கிய சிந்தனையுடன் கூடிய கருத்துகளோடு இணைத்து, உணர்வுப்பூர்வமாகவும், அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய வகையிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. ‘பரிமளா & கோ’ திரைப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு, உண்மையான மற்றும் நம் வாழ்க்கையோடு இணையும் கதைகளுக்கான பார்வையாளர்களின் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. அந்தப் பயணத்தில், ‘நூறு சாமி’ மற்றொரு வலுவான அத்தியாயத்தை சேர்க்கிறது. பல மொழிகளில் குடும்ப பொழுதுபோக்கிற்கான முதன்மை தளமாக ZEE5-இன் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், பல்வகை உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், இந்த மனதைத் தொடும் கதையை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் குடும்பங்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்,” எனத் தெரிவித்தார்.
கலகலப்பான குடும்ப பொழுதுபோக்காக அமைந்த ‘பரிமளா & கோ’ திரைப்படத்திற்குப் பிறகு, மனதை வருடும் இன்னொரு குடும்ப அனுபவத்தை வழங்கும் ‘நூறு சாமி’, வரும் ஆகஸ்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.






