“பாரிஸ் கஃபே” திரை விமர்சனம்

“பாரிஸ் கஃபே” சராஜ் சீலன் இயக்கத்தில் கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கே.  இந்த படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல் கே. மனோகரன், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நாயனா சாய், ராஜ்குமார், பிபின் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சினிமா வெறும் பொழுதுபோக்கிற்கான ஊடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வலிமையான கருவி. அந்த வகையில், ஆணவப் படுகொலை என்ற தீவிரமான சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து, அதை காதல், குடும்ப உறவு மற்றும் உணர்வுகளுடன் இணைத்து சொல்லியிருக்கும் படமாக வெளியாகியுள்ளது ‘பாரிஸ் கஃபே’.

அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணரும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்தவர்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் இவர்களின் வாழ்க்கையில், பாரிஸில் குரு சோமசுந்தரம் சந்திக்கும் ஒரு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பாரிஸில் உள்ள காஃபே ஒன்றில் சென்னை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்க்கும் குரு சோமசுந்தரம், அந்த ஜோடி குறித்து விசாரிக்கிறார். அவர்கள் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடையும் அவர், சென்னை திரும்பி தனது மனைவியிடம் அந்த உண்மையை தெரிவிக்கிறார். இதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்களை அறிந்த அனுமோல், கணவர் மீது கோபமடைந்து அவரை விட்டு பிரிந்து செல்கிறார்.

பெற்றோரின் பிரிவை அறிந்த மகள் அர்ச்சனா, தனது காதலர் விஜய் விஷ்வாவுடன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து, இருவரையும் மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறார். அதே நேரத்தில், அந்த இளம் காதல் ஜோடி யார், அவர்களின் மரணத்திற்கும் குரு சோமசுந்தரத்திற்கும் என்ன தொடர்பு, பெற்றோரின் பிரிவுக்கு என்ன காரணம் என்ற கேள்விகளுக்கான பதில்களே “பாரிஸ் கஃபே” படத்தின் கதை.

இயக்குநர் சரஜ் சீலன், ஆணவப் படுகொலை போன்ற தீவிரமான பிரச்சனையை நேரடியாக பிரச்சாரமாகவோ, போதனை செய்யும் விதமாகவோ சொல்லாமல், காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் இணைத்து சுவாரஸ்யமான திரைக்கதையாக கையாண்டிருக்கிறார். முதல் படத்திலேயே சமூக அக்கறை கொண்ட ஒரு கதையை தேர்வு செய்திருப்பது கவனம் ஈர்க்கிறது.

கணவன் – மனைவியாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இருவரும் இயல்பான நடிப்பால் கதைக்கு பலம் சேர்க்கிறார்கள். ஆணவப் படுகொலையை மறைக்க தனது கணவரும் உடந்தையாக இருந்ததை அறிந்து கோபப்படும் அனுமோல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியையும் கோபத்தையும் தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

குடும்பத்திற்காக தவறான செயலில் ஈடுபட்டு, அதே குடும்பத்திற்காக அதன் விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளும் மனிதராக குரு சோமசுந்தரம் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். சில காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பும், நகைச்சுவை உணர்வும் ரசிக்க வைக்கின்றன.

இளம் காதல் ஜோடியாக வரும் விஜய் விஷ்வா மற்றும் அர்ச்சனா தங்களது துள்ளலான நடிப்பால் காட்சிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறார்கள். மற்றொரு காதல் ஜோடியாக வரும் சாய் விக்கி மற்றும் நயனா சாய், தங்களது கதாபாத்திரங்களின் வலியை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி மனதை கனக்கச் செய்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி, அமெரிக்கா மற்றும் பாரிஸ் பின்னணிக் காட்சிகளை படத்தின் தேவைக்கும் தயாரிப்பு பட்ஜெட்டுக்கும் ஏற்ற வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். வெளிநாட்டு காட்சிகளை கிராபிக்ஸ் உதவியுடன் கதைக்குள் பொருத்தமாக இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கே இசையில் அமைந்துள்ள பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளன. பின்னணி இசையும் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப பயணித்து காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

ஆணவப் படுகொலை என்ற மையப் பிரச்சனையை வித்தியாசமான அணுகுமுறையில் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு படத்தொகுப்பாளர் வி.ஜே. சாபு ஜோசப் பணியும் கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக, கடந்த கால சம்பவங்களையும் நிகழ்கால கதையையும் இணைக்கும் விதத்தில் எடிட்டிங் கவனம் பெறுகிறது.

மொத்தத்தில், ஆணவப் படுகொலைக்கு எதிரான வலுவான கருத்தை காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து, பிரச்சாரத் தன்மை இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையாக சொல்ல முயன்றிருக்கிறது ‘பாரிஸ் கஃபே’. குரு சோமசுந்தரம் – அனுமோல் கூட்டணியின் இயல்பான நடிப்பு, இளம் ஜோடிகளின் பங்களிப்பு மற்றும் சமூக அக்கறை கொண்ட கதைக்களம் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

“பாரிஸ் கஃபே” படத்திற்கு மதிப்பீடு 3/5

“பாரிஸ் கஃபே” கவனம் ஈர்க்கும் படம்.