“சிக்மா” திரை விமர்சனம்

“சிக்மா” ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அல்லிராஜா சுபாஸ்கரன் – லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தமன் எஸ். இந்த படத்தில் சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், யோக் ஜேபி, ஷீலா ராஜ்குமார், அன்புதாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

அப்பா விட்டுச் சென்ற ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமையால் சிக்கித் தவிக்கும் சந்தீப் கிஷன், தனது தாயின் நினைவாக ஒரு நூலகத்தை நடத்தி வருகிறார். நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை ஒலி வடிவில் பதிவு செய்து, யூடியூப் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த முயற்சியின் மூலம் ஃபரியா அப்துல்லாவுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. அவரது உதவியுடன் யூடியூப் வழியாக வருமானம் ஈட்டத் தொடங்கும் சந்தீப் கிஷன், அந்தப் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதன் மூலம் தனது கடன் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறார்.

ஆனால், சூதாட்ட விடுதியை நடத்துபவர்களிடம் பணத்தை இழந்து, மீண்டும் பழைய நிலைக்கே திரும்புகிறார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பல ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கும் ஒரு பெட்டகத்தின் சாவி அவரது கையில் கிடைக்கிறது. அந்த சாவியின் உண்மையான மதிப்பு என்ன என்பது தெரியாமல், அதில் இருக்கும் மற்றொரு ரகசியத்தை வைத்து தனது வாழ்க்கையை மாற்ற முயற்சிக்கிறார். அவரது முயற்சிகள் தொடர்ந்து சிக்கலில் சிக்க, அந்த சாவி யாருடையது, பெட்டகம் எங்கே இருக்கிறது, அதற்குள் என்ன இருக்கிறது, சந்தீப் கிஷனின் கடன் பிரச்சனை இறுதியில் தீர்ந்ததா என்பதே “சிக்மா”வின் மீதிக்கதை.

சந்தீப் கிஷன் தனது கதாபாத்திரத்தை மிக இயல்பாக கையாண்டிருக்கிறார். பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனாகவும், சூழ்நிலையால் எதிர்பாராத ஆபத்துகளில் சிக்கிக் கொள்ளும் மனிதராகவும் தனது நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் அவரது டைமிங் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் வேகத்துக்கு ஏற்ப அவரது உடல் மொழியும் நடிப்பும் அமைந்திருப்பது கூடுதல் பலம்.

ஃபரியா அப்துல்லாவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவரது கதாபாத்திரத்திற்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை. நாயகியாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும், திரைக்கதையில் அவரது பங்களிப்பு குறைவாக இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் ஷிவ் பண்டிட், தனது ஸ்டைலான தோற்றத்தாலும், இளமை துடிப்பான நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார். வில்லத்தனத்தை வழக்கமான பாணியில் வெளிப்படுத்தாமல், தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால், தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் இடைவெளியை இவர் நிரப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது.

சம்பத்ராஜ், அன்பு தாசன், யோக் ஜேபி, ஷீலா ராஜ்குமார், மகாலட்சுமி சுதர்சனன், கமலேஷ் ஜெகன், கிரன் கொண்டா, நாகசாய் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பிரமாண்டமான தோற்றத்தை வழங்குகிறது. குறிப்பாக ஆக்‌ஷன் மற்றும் சேசிங் காட்சிகள் வேகம் குறையாமல், மாஸ் சினிமாவுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய அளவிலான காட்சிகளிலும் கேமரா வேலை கவனம் ஈர்க்கிறது.

தமன்.எஸ் இசையில் பாடல்கள் கமர்ஷியல் ரசிகர்களை கவரும் வகையில் துள்ளலுடன் அமைந்துள்ளன. திரையில் வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, பின்னணி இசை படத்தின் வேகத்தையும் ஆக்‌ஷன் காட்சிகளின் பரபரப்பையும் மேலும் அதிகரிக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், கதை வேகமாக நகர வேண்டிய இடங்களில் தேவையற்ற நீளத்தை தவிர்த்து படத்தை சுறுசுறுப்பாக கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார். குறிப்பாக சேசிங் மற்றும் ஆக்‌ஷன் பகுதிகள் தொய்வின்றி நகர்வதற்கு எடிட்டிங் உதவுகிறது.

பணப் பிரச்சனை, ரகசிய சாவி, மிகப்பெரிய பெட்டகம் என மையக்கரு புதிதாக இல்லாவிட்டாலும், அதை கமர்ஷியல் பாணியில் விறுவிறுப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜேசன் சஞ்சய். கதை எங்கு செல்கிறது என்பதை ஓரளவு கணிக்க முடிந்தாலும், திரைக்கதையில் தொடர்ந்து வரும் திருப்பங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் படத்தை சுவாரஸ்யமாக வைத்திருக்கின்றன.

அதிலும் ஆக்‌ஷன், சேசிங், நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் தருணங்களை சரியான அளவில் கலந்து கொடுத்திருப்பது படத்தின் முக்கிய பலம். கதையின் தீவிரத்தை அதிகமாக்காமல், பொழுதுபோக்கு அம்சங்களை முன்னிலைப்படுத்தி படத்தை நகர்த்தியிருப்பதால் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கமர்ஷியல் அனுபவமாக ‘சிக்மா’ அமைகிறது.

“சிக்மா” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

“சிக்மா” கமர்ஷியல் என்டர்டெயினர்