“டாக்ஸிக்” திரை விமர்சனம்

“டாக்ஸிக்” கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் மற்றும் வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி. இந்த படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1947 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவை பின்னணியாகக் கொண்டு, அங்கு ஆதிக்கம் செலுத்தும் மாஃபியா கும்பல்களின் மோதலை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘டாக்ஸிக்’. முரட்டுத்தனமும் துடிப்பும் கொண்ட யாஷ், தனது சகோதரி நயன்தாராவின் துணையுடன் எதிரிகளை வேட்டையாடுவதில் இருந்து கதை தொடங்குகிறது. கோவா மாஃபியா உலகில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஆசை நயன்தாராவுக்கு இருக்க, எதிர்பாராத சம்பவம் அவர்களது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது.

சகோதரியின் மரணத்திற்குப் பிறகு கோவாவை விட்டு வெளியேறும் யாஷ், சீனாவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துகிறார். பின்னர் மீண்டும் கோவா திரும்பும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவரது முதல் மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்து கொள்வதும், தனது 10 வயது மகனை யாஷ் கொலை செய்ய முயன்று பின்னர் அவனை விரட்டுவதும் கதையில் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

அதன்பிறகு கோவாவில் மீண்டும் தனது சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்தும் யாஷ், ருக்மணி வசந்தை திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவரது சாம்ராஜ்யத்துக்கும் மகனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்து யார் மூலம் வருகிறது? தனது மகனையும் சாம்ராஜ்யத்தையும் யாஷ் காப்பாற்றினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

‘கே.ஜி.எப்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதே அளவிலான பிரமாண்டம் மற்றும் அதிரடி காட்சிகள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிடலாம் என்ற எண்ணம் ‘டாக்ஸிக்’ படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. வலுவான கதை மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாமல் வெறும் பிரமாண்டத்தை மட்டுமே நம்பினால் படம் கைகொடுக்காது என்பதை இப்படம் உணர்த்துகிறது.

யாஷ், தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். வித்தியாசமான மேற்கத்திய ஆடைகள், மது, புகை, பெண்களுடனான காட்சிகள், துப்பாக்கிச் சண்டை, தலை, கை, கால்களை வெட்டி வீழ்த்துவது என அவரது கதாபாத்திரம் முழுக்க முழுக்க வன்முறையைச் சுற்றியே நகர்கிறது. தந்தையும் மகனும் வன்முறையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் கொலைகளை சர்வசாதாரணமாகச் செய்கிறார்கள்.

யாஷின் ஸ்டைலிஷான தோற்றமும், கம்பீரமான திரை இருப்பும் ரசிகர்களை கவர்ந்தாலும், தொடர்ச்சியான ஆக்‌ஷன் காட்சிகளால் அவரது நடிப்புத் திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்பு குறைந்து விடுகிறது. கிளைமாக்ஸுக்கு முன்பாக சில காட்சிகளில் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்தாலும், அங்கும் ஆக்‌ஷனே ஆதிக்கம் செலுத்துகிறது.

யாஷின் சகோதரியாக வரும் நயன்தாரா, ஆரம்பக் காட்சிகளில் அதிரடியான அறிமுகத்துடன் கவனம் ஈர்க்கிறார். ஆனால் தொடர்ந்து வரும் காட்சிகளில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், ஒரு சில காட்சிகளில் அமைதியாக நிற்கும் கதாபாத்திரமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம்.

கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா, ஹுமா குரேஷி என படத்தில் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும், அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு வலுவாக இல்லாததால் நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அவர்களின் ஆடைகள் மற்றும் தோற்றம்தான் பல இடங்களில் நடிப்பை விட அதிகமாக கவனம் ஈர்க்கின்றன.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியின் பணி படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. கிராபிக்ஸ் காட்சிகளை நேர்த்தியாக இணைத்து பிரமாண்டமான உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக 1947–1970 காலகட்டத்தை பிரதிபலிக்கும் உடைகள், அரங்க அமைப்பு மற்றும் வண்ணத் தேர்வுகள் காட்சிகளுக்கு தனித்துவமான தோற்றத்தை கொடுக்கின்றன.

ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. அதேநேரம் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தேவையான வேகத்தை கொடுக்கிறது. ஆனால் படம் முழுவதும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால், அதற்கேற்ப அமைக்கப்பட்ட பின்னணி இசை சில இடங்களில் அளவுக்கு அதிகமான சத்தமாக காதுகளை பதம் பார்க்கிறது.

படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னிக்கு படம் மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. ஏராளமான கதாபாத்திரங்கள், பல கிளைக்கதைகள் என கதை விரிவடைவதால், அதை தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுத்துச் சொல்ல முடியாமல் போயிருக்கிறது. முதல் பாதி முடியும் நேரத்தில், “உண்மையில் என்ன கதை?” என்ற கேள்வி பார்வையாளர்களிடம் எழுகிறது. இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு கதையை புரிய வைத்தாலும், அதற்காக இவ்வளவு பிரமாண்டமான அக்கப்போரா என்ற எண்ணமே மேலோங்குகிறது.

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து உருவாக்கிய கதையில் பல கிளைக்கதைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை முறையாக இணைத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்காதது படத்தின் மிகப்பெரிய பலவீனம். கதையை விட பிரமாண்டத்திற்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது திரைக்கதையை பலவீனப்படுத்துகிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ், கதையை ஹாலிவுட் பாணியில் பிரமாண்டமாக காட்சிப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில், தேவையற்ற காட்சிகளையும் அதிகப்படியான வன்முறையையும் திணித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை துப்பாக்கிகள், கத்திகள், சண்டைகள், கொலைகள் என படம் தொடர்ந்து வன்முறையின் பாதையிலேயே பயணிக்கிறது. சில இடங்களில் இந்த அதீத வன்முறை கதையின் மீதான கவனத்தையே சிதறடிக்கிறது.

பிரமாண்டமான காட்சிகள், ஸ்டைலிஷான யாஷ், நேர்த்தியான ஒளிப்பதிவு, பிரம்மாண்டமான கிராபிக்ஸ் ஆகியவை படத்தின் பலம். ஆனால் சுவாரஸ்யமற்ற திரைக்கதை, தெளிவற்ற கதை சொல்லல், பலவீனமான கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவை அந்த பலங்களை முழுமையாக வீணடித்துவிடுகின்றன.

‘கே.ஜி.எப்’ போன்ற படங்களின் வெற்றிக்கு காரணம் வெறும் பிரமாண்டம் மட்டுமல்ல; அதன் பின்னால் இருந்த வலுவான கதையும், கதாபாத்திரங்களும், உணர்வுப்பூர்வமான திரைக்கதையும் முக்கிய காரணங்கள். அந்த அம்சங்கள் இல்லாமல் பிரமாண்டத்தையும் வன்முறையையும் மட்டுமே நம்பியிருப்பதால், ‘டாக்ஸிக்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறுகிறது.

மொத்தத்தில், காட்சிகளில் பிரமாண்டம் தெரிந்தாலும், கதையில் அந்த பிரமாண்டம் இல்லாததால் ‘டாக்ஸிக்’ ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. சுவாரஸ்யமற்ற திரைக்கதையும் அளவுக்கு அதிகமான ஆக்‌ஷனும் சேர்ந்து, படத்தை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்திவிட்டன.

“டாக்ஸிக்” படத்திற்கு மதிப்பீடு 2.5/5

‘டாக்ஸிக்’ – ஏமாற்றம்!