“அமரம்” அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் சி. ஆர். ராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை மிக்கி ஜே. மேயர். இந்த படத்தில் ராஜன் தேஜேஷ்வர், ஐரா அகர்வால், சாய் தீனா, ஜார்ஜ் மரியான், கல்கி ராஜன், ஹரீஷ் பெராடி, நாகினீடு,சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விவசாயம் பொய்த்துப் போன கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமங்களில் வாழும் மக்களின் வறுமையை சில அதிகாரம் படைத்தவர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறைந்த கூலிக்காக செம்மரம் வெட்டுதல் முதல் கொலை உள்ளிட்ட ஆபத்தான குற்றச் செயல்கள் வரை அந்த மக்களை கூலிப்படையாக பயன்படுத்தும் ஒரு இருண்ட உலகமே படத்தின் பின்னணி.
அப்படிப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கூலிப்படை இளைஞரான அருகன் கதாபாத்திரத்தில் ராஜன் தேஜஸ்வர் நடிக்கிறார். ஒரு சம்பவத்தில், நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை அவரது கண் முன்னே கொலை செய்கிறார். தந்தையை இழந்த ஐரா, அந்தக் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கொலையாளியைத் தேடி புறப்படுகிறார்.
எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையிலும், தனது காதலர் மற்றும் அவரது தந்தையான எம்.எல்.ஏ நாகிநீடுவின் உதவியுடன் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இறுதியில் அருகனை கண்டுபிடித்து பழிதீர்க்க அவரை நெருங்கும் ஐரா, எதிர்பாராத விதமாக தனது முடிவை மாற்றிக் கொள்கிறார்.
அந்த ஒரு முடிவு அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகிறது. எம்.எல்.ஏ மற்றும் அவரது மகனால் ஐராவுக்கு ஆபத்து ஏற்படுகிறது. அவரைக் காப்பாற்ற முயலும் அருகனும், அவனுடன் தொடர்புடையவர்களும் காவல்துறை மற்றும் அரசியல் அதிகாரத்தின் பிடியில் சிக்குகிறார்கள்.
இந்த ஆபத்தான சூழலில் ஐராவுடன் பயணிக்கும் அருகன், அவரையும் தனது கிராம மக்களையும் காப்பாற்றினாரா? கிழக்குத் தொடர்ச்சி மலை மக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் அந்த இருண்ட சக்திகளிடமிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பதுதான் “அமரம்” படத்தின் கதை.
நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜஸ்வர், தனது முதல் படத்திலேயே சவாலான கதாபாத்திரத்தை தேர்வு செய்திருக்கிறார். அதிக வசனங்கள் இல்லாமல் அமைதியாக பயணிக்கும் கதாபாத்திரம் என்றாலும், பார்வை மற்றும் உடல்மொழி மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக கரடுமுரடான பழங்குடி இளைஞரான அருகன் கதாபாத்திரத்திற்கு அவரது தோற்றம் கச்சிதமாக பொருந்துகிறது. ஆக்ஷன் காட்சிகளில் எடுத்துள்ள உழைப்பும் தெளிவாக தெரிகிறது. அளவான நடிப்பு மற்றும் வலுவான உடல்மொழியின் மூலம் தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்துள்ள ஐரா அகர்வால், பழிவாங்கும் உணர்வுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் தீவிரத்துடன் நாயகனைத் தேடும் காட்சிகளிலும், கொலையாளி நேருக்கு நேர் கிடைத்த பிறகு அவரைக் கொல்ல முடியாமல் மனதளவில் தடுமாறும் தருணங்களிலும் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.
பழங்குடி சமூகத்தின் மூத்தவராக நடித்துள்ள ஜார்ஜ் மரியான் தனது அனுபவமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிறார். கிராம மக்களை தவறான வேலைகளுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தில் சாய் தீனா கவனம் பெறுகிறார்.
எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நாகிநீடு, அவருடன் கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை அளித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பரத் குமார், படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் வறட்சியையும், அங்கு வாழும் மக்களின் கடினமான வாழ்க்கையையும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார். மலைப்பகுதிகளின் இயற்கை அமைப்பையும், வெறுமையும் நிறைந்த கிராமங்களையும் கதையின் உணர்வுக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
மிக்கி ஜெ. மேயர் இசையில் பாடல்கள் கதையின் சூழலுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. பின்னணி இசை ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு தேவையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திரைக்கதையின் வேகத்தை உயர்த்துவதிலும் இசையின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
படத்தொகுப்பாளர் ஆர். ஸ்ரீராமர், ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் செல்கிறார். தேவையற்ற நீட்டிப்புகள் இல்லாமல் காட்சிகளை தொகுத்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். அதே நேரத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் அந்த மக்களின் வாழ்வியல் பற்றிய தகவல்களை எளிமையாகச் சொல்லி பார்வையாளர்களின் மனதில் பதிய வைப்பதும் சிறப்பு.
தமிழ் சினிமாவில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பல படங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கிழக்குத் தொடர்ச்சி மலையை மையமாகக் கொண்ட படைப்புகள் மிகக் குறைவு. அந்த இடைவெளியை நிரப்பும் முயற்சியாக ‘அமரம்’ உருவாகியுள்ளது.
கிழக்குத் தொடர்ச்சி மலை மக்களின் வறுமை, வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் அதிகாரம் படைத்தவர்களால் அவர்கள் எவ்வாறு தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா கதையின் முக்கிய பின்னணியாக அமைத்திருக்கிறார். சமூகப் பிரச்சினையை நேரடியாக போதிக்காமல், அதனுடன் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களை கலந்து சுவாரஸ்யமான திரை அனுபவமாக மாற்றியிருப்பது பாராட்டுக்குரியது.
முதல் பாதியில் செம்மரம் வெட்டும் கும்பல்கள், கூலிப்படையாக செயல்படும் மனிதர்கள் மற்றும் அவர்களின் பின்னணி ஆகியவற்றை விறுவிறுப்பாக அறிமுகப்படுத்துகிறார். இரண்டாம் பாதியில் நாயகியை காப்பாற்றுவதற்கான பயணம், அரசியல் அதிகாரம் மற்றும் காவல்துறையின் அச்சுறுத்தல், எதிர்பாராத திருப்பங்கள் என கதையை வேகமாக நகர்த்துகிறார்.
சமூகப் பின்னணியை மையமாகக் கொண்ட கதையுடன் காதல், ஆக்ஷன், காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை தேவையான அளவில் இணைத்திருப்பதால் படம் முழுக்க கமர்ஷியல் சுவாரஸ்யம் குறையாமல் பயணிக்கிறது.





