“யெல்லோ” ஹீரோவின் அடுத்த இன்னிங்ஸ்: ஜூன் 26 முதல் ZEE5-ல் களமிறங்கும் “மம்மட்டியான் ஸ்டார்ஸ்”!

‘யெல்லோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர் வைபவ் முருகேசன், தனது அடுத்த முக்கியமான படைப்பான ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் தொடரின் மூலம் மீண்டும் கவனம் ஈர்க்கத் தயாராகியுள்ளார். இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கியுள்ள இந்த ZEE5 ஒரிஜினல் தொடர், ஜூன் 26 முதல் நேரடியாக ZEE5 தளத்தில் வெளியாகிறது.

கிரிக்கெட்டின் மீது அளவில்லா காதல் கொண்ட கிராமத்து இளைஞர்கள் குழு, தங்கள் கனவுகளை நனவாக்க சென்னை நோக்கி பயணிக்கிறது. ஆனால் எதிர்பாராத மோசடி ஒன்றில் சிக்கிக்கொள்ளும் அவர்கள், அதிலிருந்து மீள புத்திசாலித்தனமான யுக்திகளையும் தன்னம்பிக்கையையும் ஆயுதமாகக் கொண்டு போராடுகிறார்கள். நட்பு, நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் வாழ்க்கைப் பாடங்களை இணைத்து சொல்லும் பயணமாக ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ உருவாகியுள்ளது.

இந்த தொடரில் வைபவ் முருகேசனுடன் வெங்கட் பாலமுரளி, ஜகா, லாவண்யா, ஷரத் ரவி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவரும் வகையில் தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வைபவ் முருகேசனின் திரைப்பயணம் பொறுமை மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாக திகழ்கிறது. சிறுவயதிலிருந்தே நாடக மேடைகளில் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய அவர், பல ஆண்டுகள் பயிற்சிகள் மற்றும் பட்டறைகள் மூலம் தன்னை செதுக்கிக் கொண்டார். பின்னர் ‘பேட்ட’, ‘கோமாளி’, ‘தாராள பிரபு’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றி தனது இயல்பான நடிப்பால் கவனம் பெற்றார்.

அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது ‘வதந்தி’ வெப் தொடர். 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை முந்தி தேர்வான அவர், ‘ஜோன்ஸ் துரை’ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து ‘அமரன்’, ‘ஹே லீலா’ போன்ற படைப்புகளிலும் தனது திறமையை நிரூபித்தார்.

சமீபத்தில் வெளியான ‘யெல்லோ’ திரைப்படத்தில் நாயகனாக நடித்த அவர், தனது உணர்வுப்பூர்வமான மற்றும் நம்பகத்தன்மை மிக்க நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்தப் படத்தில் வெளிப்படுத்திய நடிப்பிற்காக 2025 ஆம் ஆண்டின் அண்ணா யுனிவர்சிட்டி டெக்கோ ஃபஸ்ட்-டி விருதில் சிறந்த அறிமுக நாயகன் விருதையும் வென்றார்.

நடிப்பைத் தாண்டி நடனம், இசை, பாடல், குதிரைச் சவாரி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட பல துறைகளிலும் திறமையைக் கொண்டுள்ள வைபவ், புதிய தலைமுறையின் பல்திறன் கலைஞர்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஜூன் 26 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’, வைபவ் முருகேசனின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனவுகள், நட்பு மற்றும் விடாமுயற்சியை பேசும் இந்த தொடர், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.