டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இணைந்து புதிய ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தை உருவாக்குகின்றன. குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.
வழக்கமான ஹாரர் படங்களிலிருந்து மாறுபட்டு, அச்சம், காதல், மர்மம் மற்றும் ஆழமான உணர்வுகளுடன் இசையையும் முக்கிய அம்சமாகக் கொண்டு ‘ரூஹ்’ திரைப்படம் உருவாகிறது. திகிலூட்டும் காட்சிகளுடன் மனதைத் தொடும் இசையும் இணைந்து ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஏற்கெனவே பல ஹாரர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள இம்ரான் ஹாஷ்மி, மீண்டும் அதே ஜானரில் உருவாகும் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அவரது படங்களில் இடம்பெற்ற காதல், பிரிவு, ஏக்கம் உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் பல ஆண்டுகளாக ரசிகர்களின் விருப்பமான இசையாக இருந்து வருகின்றன. இந்நிலையில், குமார் தௌரானியின் இசை அனுபவத்தையும் டிப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பலத்தையும் ஒன்றிணைத்து ‘ரூஹ்’ உருவாகிறது.
இப்படம் குறித்து குமார் தௌரானி கூறுகையில்,
“இம்ரானுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம். ஏனெனில், அவர் அறிமுகமான ‘ஃபுட்பாத்’ திரைப்படத்தையும் நாங்கள்தான் தயாரித்திருந்தோம். கடந்த பல ஆண்டுகளாகப் பல திரைப்படங்களில் இணைந்து மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். தற்போது ‘ரூஹ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் அந்த வெற்றி மாயாஜாலத்தை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தில் சன்னி கன்னா மற்றும் விக்ரம் கக்கருடன் இணைந்து பணியாற்றுவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.”
விக்ட் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் விக்ரம் கக்கர் கூறுகையில்,
“‘ரூஹ்’ திரைப்படம் எங்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு படைப்பு. டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் எங்களுடன் இணைந்திருப்பது எங்களுக்கு ஒரு முக்கியமான மைல்கல். அனைவரும் இணைந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத, பிரம்மாண்டமான ஹாரர் திரைப்பட அனுபவத்தை 2027 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வழங்குவதில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்.”
தயாரிப்பாளர் சன்னி கன்னா கூறுகையில்,
“குமார் தௌரானி மற்றும் கிரிஷ் குமார் ஆகியோர் ‘ரூஹ்’ திரைப்படத்தில் எங்களுடன் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. திரைப்படம் மற்றும் இசைத் துறைகளில் அவர்கள் உருவாக்கியுள்ள சாதனைகளும் பாரம்பரியமும் இந்தக் கூட்டணியை மேலும் சிறப்பாக்குகின்றன. குறிப்பாக, இசை முக்கியப் பங்கு வகிக்கும் இப்படத்தில் அவர்களுடன் இணைந்திருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இந்தக் கூட்டணியின் மூலம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களிடம் இப்படத்தைக் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம்.”
இப்படத்தின் இசை குறித்துப் பேசிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி கூறுகையில்,
“இந்தப் படத்தில் குமார் ஜியுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வாகவே கருதுகிறேன். எனது திரைப்படங்களுடன் ரசிகர்கள் உணர்வுபூர்வமாக இணைவதில் இசை எப்போதுமே முக்கியப் பங்கு வகித்துள்ளது. ‘ரூஹ்’ திரைப்படத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் வகையில், காதல், மர்மம் மற்றும் ஆழமான உணர்வுகள் நிறைந்த இசையை உருவாக்க விரும்புகிறோம்.”
டிப்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை விக்ட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. குமார் தௌரானி, கிரிஷ் குமார், விக்ரம் கக்கர் மற்றும் சன்னி கன்னா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மயங்க் ஷர்மா இயக்கத்துடன் திரைக்கதையையும் உருவாக்கியுள்ளார். அவருடன் விஷால் கபூர் திரைக்கதையில் இணைந்துள்ளார். விகாஸ் சாஹ்னி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். படத்தின் இசை மற்றும் பாடல்களை டிப்ஸ் மியூசிக் நிறுவனம் வெளியிடவுள்ளது.
ஹாரர், காதல், மர்மம் எனப் பல உணர்வுகளை இசையுடன் இணைத்து உருவாகும் ‘ரூஹ்’, இம்ரான் ஹாஷ்மியின் ரசிகர்கள் மட்டுமின்றி ஹாரர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





