“தர்மன்” மூலம் ரஜினியுடன் மீண்டும் இணையும் சிம்ரன்

சுமார் மூன்று தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்திருக்கும் நடிகை சிம்ரன், இன்று வரை ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அழகு, திறமை, நடிப்பு, நடனம் என அனைத்தையும் சமநிலையுடன் வெளிப்படுத்திய அவர், காலம் மாறினாலும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்து புதிய உயரங்களுக்கு கொண்டு சென்று வருகிறார்.

கதாநாயகியாக எண்ணற்ற வெற்றிப் படங்களை கொடுத்த சிம்ரன், காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு, வித்தியாசமான மற்றும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய அத்தியாயமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இது குறித்து நடிகை சிம்ரன் பகிர்ந்து கொண்டதாவது,

“சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது ‘பேட்ட’ திரைப்படத்தில் நிறைவேறியது. என்னுடையது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஆனால், இன்று ‘தர்மன்’ படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என் திரைப்பயணம் முழுவதும் எனக்கு மாறாத அன்பையும் ஆதரவையும் வழங்கி வரும் என் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஊக்கம்தான் ஒவ்வொரு புதிய அத்தியாயத்தையும் உற்சாகத்துடன் தொடங்க எனக்கு உதவுகிறது. ‘கேளுங்கள்… நம்புங்கள்… இந்த பிரபஞ்சம் நீங்கள் நினைக்காத விதத்தில் பதிலளிக்கும்’ என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த மனதுடன் இந்த அழகான புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன்” என்றார்.

1997-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி வெளியான ‘ஒன்ஸ் மோர்’ மற்றும் ‘வி.ஐ.பி.’ திரைப்படங்கள் மூலம் தமிழில் அறிமுகமான சிம்ரன், அதன் பிறகு முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் ஒரு நட்சத்திரமாக உருவெடுத்தார்.

திரை உலகில் மட்டுமல்லாமல், குடும்ப வாழ்க்கை, தொழில்முனைவு உள்ளிட்ட துறைகளிலும் சமநிலையுடன் பயணித்து வரும் சிம்ரன், தனது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் மூலம் இன்றும் முன்னணி நடிகையாக தனது இடத்தை உறுதியாக தக்க வைத்திருக்கிறார். ‘தர்மன்’ திரைப்படத்தில் அவர் ஏற்கும் புதிய கதாபாத்திரம், அவரது திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.