ஜிவி பிரகாஷ் – சீனு ராமசாமி கூட்டணியின் “இடிமுழக்கம்” படத்தின் அதிரடி பாடல்கள் வெளியீடு!

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தின் ‘கானா விளக்கு மயிலே…’ மற்றும் ‘அடி தேனி சந்தையில்…’ ஆகிய இரண்டு அதிரடி நாட்டுப்புற குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிகரமான பயணத்தை தொடரும் ஜிவி பிரகாஷ் குமார், இயக்குநர் சீனு ராமசாமியுடன் முதன்முறையாக இணைந்துள்ள இந்த திரைப்படம், ஆரம்பம் முதலே திரைப்பட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

படத்தின் உற்சாகமான பாடல்களில் ஒன்றான ‘கானா விளக்கு மயிலே…’ பாடலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசையில், பாடகர் ஆண்டனி தாசன் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.

அதேபோல், ‘அடி தேனி சந்தையில்…’ என்ற மற்றொரு நாட்டுப்புற குத்துப்பாடலுக்கு லா. வரதன் பாடல் வரிகள் எழுதியிருக்கிறார். இந்த பாடலை ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். இரு பாடல்களும் கிராமத்து கொண்டாட்ட மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளதால், இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

தென் தமிழகத்தை பின்னணியாகக் கொண்ட பழிவாங்கும் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இறைச்சிக் கடை உரிமையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர், செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த இரு லிரிக்கல் பாடல்களும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.