“வதந்தி 2” ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சைமன் கே.கிங். இந்த படத்தில் எம். சசிகுமார், அனகா, அபர்ணா தாஸ், யஷ்வந்த், விவேக் பிரசன்னா, ரேவதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கிரைம் திரில்லர் கதைகளுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வதந்தி’ தொடரின் இரண்டாம் பாகம், மேலும் சிக்கலான விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மனித உணர்வுகளை இணைத்து சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குகிறது.
மதுரையில் அரசு நிகழ்ச்சிக்காக பள்ளம் தோண்டும் போது அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் இந்த சம்பவம் ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்த, விசாரணை பொறுப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மீது ஒப்படைக்கப்படுகிறது.
எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் தொடங்கும் விசாரணையில், அதே இடத்தில் மற்றொரு பெண்ணின் எலும்புக்கூடும் புதைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. இருவரும் கொலை செய்யப்பட்டவர்கள் என்பது உறுதியானதும், வழக்கு முடிந்ததாக மற்றவர்கள் கருதினாலும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க சசிகுமார் தொடர்ந்து விசாரணையை முன்னெடுக்கிறார். ஒவ்வொரு தடயமும் புதிய மர்மங்களை உருவாக்க, இறுதியில் அந்த பெண்கள் யார்? கொலைக்குப் பின்னால் இருந்த உண்மை என்ன? என்பதற்கான பதிலை விறுவிறுப்பாக சொல்லுகிறது இந்த தொடர்.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், வழக்கமான கிரைம் திரில்லர் பாணியில் பல துணைக் கதைகளுடன் திரைக்கதையை நகர்த்தினாலும், பார்வையாளர்கள் யூகிக்கும் ஒவ்வொரு வழியையும் மாற்றும் வகையில் சஸ்பென்ஸை கட்டமைத்துள்ளார். முதல் அத்தியாயத்திலேயே கதைக்குள் இழுக்கும் திரைக்கதை, ஒவ்வொரு எபிசோடிலும் புதிய கேள்விகளை எழுப்பி, இறுதி வரை ஆர்வத்தை குறைய விடுவதில்லை.
கொலை வழக்கை மட்டுமே மையமாகக் கொள்ளாமல், காதல், குடும்ப உறவுகள், கணவன்–மனைவி பாசம், மதுரை இளைஞர்களின் ஜல்லிக்கட்டு கலாச்சாரம் மற்றும் உலகளவில் பேசப்படும் ஒரு முக்கிய சமூக பிரச்சினையையும் கதையுடன் இணைத்திருப்பது தொடரின் கூடுதல் பலமாக அமைகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசாவாக நடித்துள்ள சசிகுமார், தனது இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மை சேர்த்திருக்கிறார். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அமைதியான நடிப்பின் மூலம் ஒரு விசாரணை அதிகாரியின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நடித்துள்ள அனகா, அதிகாரம் மிக்க போலீஸ் அதிகாரியாக சிறப்பாக பொருந்தியிருக்கிறார். அவரது திரைநடையும், கம்பீரமான தோற்றமும் கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கிறது.
முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அறிமுக நடிகர் யஷ்வந்த், தொடரின் மிகப்பெரிய ஆச்சரியமாக திகழ்கிறார். மதுரை இளைஞனின் உடல்மொழி, ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம், காதல் காட்சிகள் என ஒவ்வொரு தருணத்திலும் இயல்பான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார்.
அபர்ணா தாஸ், சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் பெரிதாக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அதேசமயம், ரேவதி மற்றும் முதல் சீசனில் இடம்பெற்ற விவேக் பிரசன்னா ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக கையாண்டுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி, வழக்கமான இருண்ட கிரைம் திரில்லர் தோற்றத்தை தவிர்த்து, மதுரையின் இயற்கை சூழலை அழகாக பதிவு செய்திருக்கிறார். காட்சிகளின் இயல்பும், வண்ண அமைப்பும் பார்வைக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன.
சைமன் கே. கிங் இசையமைத்துள்ள பின்னணி இசை தொடரின் பதட்டத்தையும் மர்மத்தையும் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. குறிப்பாக சஸ்பென்ஸ் காட்சிகளில் அவரது இசை எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்துகிறது.
படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்த பகுதியை பார்க்கத் தூண்டும் வகையில் காட்சிகளை தொகுத்துள்ளார். எந்த இடத்திலும் வேகம் குறையாமல் கதை நகர்வது தொடரின் முக்கிய பலமாகும்.
கலை இயக்குநர் மீவின், மதுரையின் சூழல், ஜல்லிக்கட்டு காட்சிகள் மற்றும் காவல்துறை அமைப்புகளை யதார்த்தமாக உருவாக்கியுள்ளார்.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், முதல் சீசனில் “கொலையாளி யார்?” என்ற கேள்வியை மையமாகக் கொண்டிருந்த நிலையில், இந்த முறை “குற்றவாளியாக கருதப்பட்டவர் உண்மையில் நிரபராதியா?” என்ற புதிய கோணத்தில் கதையை நகர்த்தியுள்ளார். ஒவ்வொரு அத்தியாயமும் புதிய சந்தேகங்களை உருவாக்கி, இறுதிவரை சஸ்பென்ஸை தக்கவைத்திருப்பது பாராட்டுக்குரியது.
வழக்கமான கிரைம் திரில்லர்களில் இடம்பெறும் அதிகப்படியான வன்முறை, ஆபாசம் அல்லது அதிர்ச்சி காட்சிகளை தவிர்த்து, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான விசாரணைத் தொடராக ‘வதந்தி 2’ உருவாகியுள்ளது.
“வதந்தி 2” படத்திற்கு மதிப்பீடு 3.5/5
வன்முறையை விட புத்திசாலித்தனமான திரைக்கதையால் வெற்றிபெறும் கிரைம் திரில்லர்





