10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் “குப்பி” வெற்றிக் கூட்டணி!

மலையாள சினிமாவில் விமர்சகர்களின் பாராட்டையும், ரசிகர்களின் நீடித்த ஆதரவையும் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சிறப்பு தருணத்தை நினைவுகூரும் வகையில், நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இணைந்து எடுத்துள்ள புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனுடன், இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

திரையுலகத் தகவல்களின்படி, டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படம், இருவரின் திரைப்பயணத்திலேயே மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘குப்பி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சேத்தன் ஜெயலாலும் இந்தப் புதிய முயற்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016-ஆம் ஆண்டு வெளியான ‘குப்பி’, டொவினோ தாமஸின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத மைல்கல் படமாக அமைந்தது. அதில் தேஜஸ் வர்க்கி என்ற பொறியாளர் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. அதேபோல், இயக்குநர் ஜான்பால் ஜார்ஜுக்கும் இந்த திரைப்படம் மலையாள சினிமாவில் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திய அறிமுகப் படைப்பாக அமைந்தது.

அதன் பின்னர் ‘தீவண்டி’, ‘கோதா’, ‘மாயநதி’, ‘மின்னல் முரளி’, ‘2018’, ‘அஜயண்டே ரண்டாம் மோஷனம் (ARM)’ உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் டொவினோ தாமஸ் இந்திய அளவில் கவனம் பெற்ற முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

இதேபோல், ஜான்பால் ஜார்ஜ் இயக்கிய ‘அம்பிலி’ திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதுடன், அவர் தயாரித்த ‘ரோமான்சாம்’ திரைப்படம் மிகப்பெரிய வர்த்தக வெற்றியைப் பெற்று, தயாரிப்பாளராகவும் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.

‘குப்பி’ திரைப்படத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவிருப்பது மலையாள திரையுலக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதிய திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.