மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடித்துள்ள புஜிதா பொன்னாடா, ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வளர்ந்தவர். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் குடும்பத்தில் வளர்ந்த புஜிதா, சென்னையில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.
பணியுடன் சேர்த்து ஓவியம், நடனம் உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர், ஒரு இயக்குநரின் அழைப்பின் பேரில் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வாய்ப்பு அவரை நடிப்புத் துறைக்கு அழைத்துச் சென்றது. அவர் நடித்த ‘பரிச்சயம்’ குறும்படம் இயக்குநர் சுகுமாரின் கவனத்தைப் பெற்றது. பின்னர், விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பின் மூலம் சுகுமாரைச் சந்தித்த புஜிதா, சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவான ‘தர்ஷகுடு’ திரைப்படத்தில் நடிக்கத் தேர்வானார்.
தொடர்ந்து, ராம் சரண் நடித்த ‘ரங்கஸ்தலம்’ திரைப்படத்திலும் ஆடிஷன் மூலம் வாய்ப்புப் பெற்று நடித்தார். திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்ததால், மென்பொருள் பொறியாளர் பணியிலிருந்து விலகி முழுநேரமாக நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்தார். இதுவரை சுமார் 25 திரைப்படங்களில் நடித்துள்ள புஜிதா, தனது அடுத்தகட்ட பயணத்தில் ‘சிக்னல் அட் 11:30’ முக்கியமான படமாக இருக்கும் எனக் கருதுகிறார்.
‘சிக்னல் அட் 11:30’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்துப் பேசிய புஜிதா, “இயக்குநர் மலர்விழி கதையை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெண் கதையை எழுதி இயக்கும்போது, பெண் கதாபாத்திரங்களை தனித்துவமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மலர்விழி மேம் கதையைச் சொன்னபோதே என்னுடைய கதாபாத்திரத்தைத் தெளிவாக விளக்கினார். அவர் விவரித்த ஒவ்வொரு காட்சியும் என் கண்முன்னே விரிந்தது.
பொதுவாக, ஒரு கதை பிடித்திருந்தாலும் அதில் நடிப்பது குறித்து முடிவெடுக்க எனக்குக் கொஞ்சம் காலம் தேவைப்படும். ஆனால், இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே நடிக்கச் சம்மதித்துவிட்டேன். எனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை இந்தக் கதாபாத்திரம் எனக்குக் கொடுத்துள்ளது” என்றார்.
படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட சவாலான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், “நிஜ வாழ்க்கையில் எனக்குக் கார் ஓட்டுவதற்குப் பயம். ஆனால், இந்தப் படத்தில் ரவுடிகள் துரத்தும்போது காரை ஓட்டிச் செல்லும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் அதற்கு மிகவும் தயங்கினேன். இயக்குநர் மலர்விழி மேம் கொடுத்த நம்பிக்கையும் ஊக்கமும் எனக்குத் தைரியத்தை அளித்தன. அதனால் அந்தக் காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பதால் நள்ளிரவில் அந்தக் காட்சியைப் படமாக்கினோம். அன்றைய இரவுடன் அந்தப் படப்பிடிப்பு முடிந்துவிடும் என நினைத்தேன். ஆனால், கூடுதல் காட்சிகளைப் படமாக்குவதற்காக வெவ்வேறு நாட்களில் மீண்டும் வர வேண்டியிருந்தது. தொடக்கத்தில் பயத்தை ஏற்படுத்திய அந்த அனுபவம், இப்போது படத்தில் எனக்குப் பிடித்தமான நினைவுகளில் ஒன்றாக மாறிவிட்டது” எனத் தெரிவித்தார்.
படத்தின் காதல் காட்சிகள் அழகிய மலைப்பகுதிகளின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறிய புஜிதா, “சந்தோஷ் பிரதாப் மிகவும் அமைதியானவர், திறமையான நடிகர். திரையில் எங்கள் ஜோடி ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் பவ்யா திரிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இருவரும் ஒரு விளம்பரத்தில் இணைந்து நடித்திருந்தோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படப்பிடிப்புத் தளத்தில் மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
ஒவ்வொரு திரைப்படமும் தனக்குப் புதிய அனுபவங்களையும் பாடங்களையும் வழங்குவதாகக் குறிப்பிடும் புஜிதா, வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் தன்னுடைய நடிப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ளவும், தனக்குள் இருக்கும் புதிய பரிமாணங்களைக் கண்டறியவும் முடிவதாகக் கூறுகிறார்.
சினிமாவுக்கு வெளியே புத்தகங்கள் வாசிப்பது, பயணம் செய்வது, கதைகளைக் கேட்பது, இசைக் கச்சேரிகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஆகியவை அவருக்குப் பிடித்தமானவை. புதிய கஃபேக்கள், உணவகங்களுக்குச் செல்வது, பல்வேறு உணவு வகைகளைச் சுவைப்பது, சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது எனத் தனது ஓய்வு நேரத்தைச் செலவிடுகிறார். மேலும், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாகவும் புஜிதா உள்ளார்.
அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும், தமிழ் சினிமாவில் தனது பயணத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் என்றும் புஜிதா பொன்னாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





