சாம் சி எஸ் இசையில் மிரளவைக்கும் ‘ரத்தத்த தா’… “டிமான்டி காலனி 3” முதல் பாடல்

இசையமைப்பாளர் சாம் சி எஸ், தனது வித்தியாசமான இசை பாணியால் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறார். அந்த வரிசையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘ரத்தத்த தா’ பாடல் வெளியாகி, இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு சாம் சி எஸ் இசையமைத்ததுடன், தனது குரலிலும் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியும் கதையின் மர்மமான மற்றும் இருண்ட உலகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், அவரது குரலும் இசையும் பாடலின் தாக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.

திரைப்படத்தின் வில்லன் உலகை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பாடல், சிவப்பு நிற காட்சியமைப்புகள் மற்றும் நரக உலகை நினைவூட்டும் கலை வடிவமைப்புகளால் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. அதனுடன் சாம் சி எஸ் உருவாக்கிய இசைக் கோர்வை, ஹாரர் மற்றும் டார்க் த்ரில்லர் உணர்வை மேலும் தீவிரப்படுத்துகிறது.

ஏற்கனவே ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தில் தனது பின்னணி இசையால் பாராட்டுகளைப் பெற்ற சாம் சி எஸ், இந்த மூன்றாவது பாகத்திலும் அதே தரத்தைத் தக்க வைத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தப் பாடலின் சவுண்ட் டிசைன் மற்றும் இசை அமைப்பு, படத்தின் மர்ம உலகிற்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஹாரர்–த்ரில்லர் படங்களுக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ‘டிமான்டி காலனி’ தொடரின் புதிய அத்தியாயமாக உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 3’ மீது ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘ரத்தத்த தா’ பாடல், அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளை குவித்து வருகிறது. பல்வேறு இசை பாணிகளில் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் சாம் சி எஸ், இந்தப் பாடலின் மூலம் மீண்டும் ஒரு முறை தனது இசை முத்திரையை பதித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக இயங்கி வரும் சாம் சி எஸ், தற்போது ரவிமோகனின் ‘கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார் 2’, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி திரைப்படம் உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.