வித்தியாசமான கதைக்களத்தில் அர்ஜுன் தாஸ்… தொடங்கியது புதிய திரைப்படம்!

புதிய திரைப்படங்களை உருவாக்கும் நோக்கில் நடிகர் விஜய் எம்.பி. தொடங்கியுள்ள Silver Tree Studios நிறுவனம், தனது முதல் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. வித்தியாசமான கதைக்களங்கள், சுவாரஸ்யமான திரைக்கதைகள் மற்றும் திறமையான கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியது.

Silver Tree Studios மற்றும் POP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தற்போது ‘Production No.1’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘புரியாத புதிர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகும் இப்படம், காதல், குடும்ப பாசம், நகைச்சுவை மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களை இணைத்த ஃபேமிலி ரொமான்ஸ் டிராமா வகையில் உருவாகிறது.

படத்தில் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விஜய் எம்.பி. மற்றும் சண்முக பிரியன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். POP Entertainment சார்பில் பர்வீன் பானு இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிகர்கள் மற்றும் இளம் திறமைகளை ஒருங்கிணைத்து களமிறங்கியுள்ள Silver Tree Studios, தொடர்ந்து புதுமையான கதைகள் மற்றும் புதிய படைப்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பயணிக்கத் திட்டமிட்டுள்ளது.

தரமான பொழுதுபோக்கு படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள Silver Tree Studios நிறுவனத்தின் திரைப்பயணம், ‘Production No.1’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தின் மூலம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.