சமூக மாற்றத்தை உருவாக்கிய ‘நந்தன்’ திரைப்படத்திற்கு டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்

சமூக நீதியை மையமாகக் கொண்டு உருவாகி, தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘நந்தன்’ திரைப்படத்திற்கு டெல்லி தமிழ்ச் சங்கம் சிறப்பு கௌரவம் அளித்துள்ளது. நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குநர் இரா.சரவணன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தி விருது வழங்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான ‘நந்தன்’ திரைப்படம், தலித் பஞ்சாயத்து தலைவர்கள் எதிர்கொள்ளும் அங்கீகாரப் போராட்டங்களையும் சமூக நிஜங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தங்களது அனுபவங்களை நேரடியாக பகிர்ந்திருந்தது பெரும் கவனத்தை ஈர்த்தது.

திரைப்படம் வெளியானபோது, இயக்குநர் பாரதிராஜா, கே.பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும், திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் படத்தின் சமூகநீதிச் செய்தியை பாராட்டினர். இதனைத் தொடர்ந்து தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அதிகாரங்களையும் சுதந்திரமாக தேசியக் கொடியேற்றும் உரிமையையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், சமூக மாற்றத்தை நிகழ்த்திய திரைப்படமாக ‘நந்தன்’ படத்தைத் தேர்வு செய்து, கடந்த ஜூன் 20ஆம் தேதி டெல்லியில் டெல்லி தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கலாச்சார அமைச்சக இயக்குநர் Shah Faesal சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டெல்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைத் தலைவர் மகேந்திரன், தயாரிப்பாளர் சிவா மற்றும் பல நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ஷா ஃபைசல், “தமிழ் திரைப்படங்கள் சமூகத்தை ஆழமாக பிரதிபலிக்கும் சக்தி கொண்டவை. நல்ல படைப்புகளை கொண்டாடுவதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்க முடியும்” என்றார்.

இணைத் தலைவர் மகேந்திரன் பேசுகையில், “‘நந்தன்’ போன்ற சமூக அக்கறை கொண்ட படத்தில் நடிக்க தனித்துவமான தைரியம் தேவை. சசிகுமார் அந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாக ஏற்று நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு மேலும் பல விருதுகள் கிடைக்கும்” என பாராட்டினார்.

நடிகர் M. சசிகுமார் பேசுகையில், “‘நந்தன்’ திரைப்படத்திற்காக நான் சந்தித்த சிரமங்கள் அனைத்தும் மக்களின் பாராட்டால் மறைந்துவிட்டன. ‘இந்தப் படம் எங்களுக்கு விடிவைத் தந்தது’ என்று ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் கண்ணீர் மல்க கூறிய தருணம், எந்த தேசிய விருதுக்கும் நிகரானது” என்றார்.

இயக்குநர் R. சரவணன் தனது உரையில், “தமிழ் மக்களின் வாழ்வோடு சினிமா கலந்த ஒன்று. ‘நந்தன்’ படத்திற்குக் கிடைத்த இந்த அங்கீகாரம், இனி மேலும் பொறுப்புடன் சமூக அக்கறை கொண்ட படைப்புகளை உருவாக்கும் ஊக்கமாக இருக்கும்” என தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில், சமூக மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படமாக ‘நந்தன்’ தேர்வு செய்யப்பட்டு, நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குநர் இரா.சரவணன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், இன்றைய இளைய தலைமுறையினரும் இந்த சமூகப் பொறுப்புமிக்க திரைப்படத்தை அறிந்து கொள்ளும் வகையில், ‘நந்தன்’ திரைப்படத்தை டெல்லி தமிழ்ச் சங்கம் விரைவில் சிறப்பு திரையிடல் மூலம் திரையிட திட்டமிட்டுள்ளது.