தமிழ் சினிமாவில் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.
ஆக்ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வ அம்சங்கள் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்கள் தனது நடிப்பிலும், படத் தேர்வுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அர்ஜுன் தாஸ், “எந்த மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஊடகங்களின் கருத்துக்கள் மூலமாகவே புரிந்துகொண்டேன்” என்றார்.
தனது புதிய படமான ‘கான் சிட்டி’ குறித்து பேசிய அவர், “இது குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான திரைப்படம். ஒரு குடும்பத்தின் வாழ்க்கை, அவர்களது உறவுகள், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்” என்று கூறினார்.
படத்தில் தான் ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்து அவர் பேசுகையில், “இது நம்மைச் சுற்றி வாழும் சாதாரண இளைஞனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வேடம். குடும்பப் பொறுப்புகள், கடன்கள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ளும் இளைஞராக நடித்துள்ளேன். பலரும் தங்களை இந்தக் கதாபாத்திரத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்” என்றார்.
திருமணம் குறித்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த அர்ஜுன் தாஸ், “நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும் இல்லை. அந்தச் செய்திகள் எங்கிருந்து வந்தது எனக்கே தெரியவில்லை” என்று சிரித்தபடி விளக்கம் அளித்தார்.
குடும்ப ரசிகர்கள் மற்றும் குறிப்பாக மூத்த பெண்கள் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என தன்னிடம் தொடர்ந்து கோரிக்கை விடுப்பதாகவும், அதனால் தற்போது அத்தகைய கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வில்லன் கதாபாத்திரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கும் வலுவான பின்னணிக் கதை இருக்க வேண்டும். அது ரசிகர்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தால்தான் அந்தக் கதாபாத்திரம் மனதில் நிற்கும். நல்ல கதையும், ஆழமான கதாபாத்திரமும் கிடைத்தால் எதிர்காலத்திலும் வில்லன் வேடங்களில் நடிக்க தயார்” என்றார்.
உலக சினிமாவில் ஹீத் லெட்ஜர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரமும், தமிழ் சினிமாவில் ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சுவாமி நடித்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரமும் தனக்கு மிகவும் பிடித்த வில்லன் வேடங்கள் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது உருவாகி வரும் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் தலைப்புக்குப் பின்னால் முக்கியமான காரணம் இருப்பதாகவும், அதன் மர்மம் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்குத் தெரியும் என்றும் அர்ஜுன் தாஸ் சுவாரஸ்யமாக தெரிவித்தார்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸுடன் அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.





