அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘மைசா’ (Mysaa). ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தானா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“நான் சோர்ந்துவிட்டேன்… நான் நின்றுவிட்டேன்… நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான குரலுடன் தொடங்கும் டீசர், அடுத்தடுத்து இடம்பெறும் அதிரடியான காட்சிகள் மூலம் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. சமூகத்தின் பல்வேறு தடைகளையும் எதிர்ப்புகளையும் கடந்து, அஞ்சாமல் போராடும் வலிமையான பெண்ணாக ராஷ்மிகா இதில் தோன்றுகிறார். தனது போராட்டத்தில் வெறும் போராளியாக மட்டுமின்றி, ஒட்டுமொத்த களத்தையும் மாற்றக்கூடிய சக்தியாக அவர் உருவெடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தில் கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் தீவிர உடற்பயிற்சி மற்றும் சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். பைக் ரேசிங், ஆபத்தான நீருக்கடியிலான சண்டைக் காட்சிகள் என பல சவாலான ஆக்ஷன் காட்சிகளில் ராஷ்மிகா துணிச்சலுடன் நடித்திருப்பது டீசரில் வெளிப்படுகிறது. குறிப்பாக, கையில் அரிவாளுடன் நீருக்கடியில் அவர் தோன்றும் காட்சி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ரவீந்திரா புல்லேவின் பிரம்மாண்டமான கற்பனைக்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணாவின் காட்சியமைப்பும், சர்வதேச புகழ்பெற்ற சண்டைப் பயிற்சியாளர் கெச்சாவின் அதிரடியான ஆக்ஷன் வடிவமைப்பும் வலு சேர்த்துள்ளன. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் டீசரின் பரபரப்பான உணர்வை மேலும் அதிகரிக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ‘மைசா’, வரும் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தானாவுடன் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், சிவா கந்துகுரி, கார்த்திக் ரஞ்சனி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.





