கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்க, தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் தலைப்பை அறிவிக்கும் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தரமான கதைகளையும் பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்கத்தையும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் கண்ணன் ரவி குழுமம், புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இப்படத்தைத் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இப்படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்தும் போஸ்டரில், ரத்தம் படிந்த வேல்கம்பு, அதைச் சுற்றிலும் பறக்கும் சிவப்பு நிறத் துணிகள், கரிசல் மண்ணின் பின்னணியில் அமைந்துள்ள காட்சிகள் எனப் பார்ப்பவர்களிடம் ஒருவித பதற்றத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவும் கவனம் ஈர்க்கிறது. கரிசல் மண்ணில் வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற வளையலை நோக்கி ரத்தம் தோய்ந்த வேல்கம்பு ஒன்று சீறிப் பாய்ந்து வந்து அதை உடைத்துச் சிதறடிக்கிறது. அந்தச் சிதறல்களுக்கு நடுவே ‘செங்குலம்’ என்ற தலைப்பு அதிரடியாக வெளிப்படுகிறது. சுற்றிலும் பதிவாகியிருக்கும் காலடித் தடங்களும், செருப்புத் தடங்களும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. வசனங்கள் ஏதுமின்றி காட்சிகளின் மூலமாகவே படத்தின் தீவிரத்தையும் தனித்துவத்தையும் உணர்த்தும் இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்கு கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். R. மோகன் மற்றும் வைர பாலன் கலை இயக்கப் பணிகளை மேற்கொள்கின்றனர். தமிழ் அரசன் படத்தொகுப்புப் பணியையும், ஶ்ரீநாத் விஸ்வநாதன் தலைமைச் செயல்பாட்டு ஒருங்கிணைப்புப் பொறுப்பையும் கவனிக்கின்றனர். மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சியை வடிவமைக்க, மோனிக் போஸ்டர் வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டு, தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் நடைபெற்று வருகிறது. பல்வேறு நிலப்பரப்புகளையும் பின்னணிகளையும் உள்ளடக்கிய பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் ‘செங்குலம்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
வித்தியாசமான தலைப்பும், ரத்தம் தெறிக்கும் அதிரடியான கிளிம்ப்ஸ் காட்சிகளும் இணைந்து ‘செங்குலம்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே உருவாக்கியுள்ளன.





