மர்டர் மிஸ்ட்ரி மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதே வரிசையில், பரபரப்பும் புதிரும் நிறைந்த புதிய திரைப்படமாக ‘மாறுவேஷம்’ உருவாகியுள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் நிறுவனம், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் ஸ்ரீனி.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 14, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய மர்மத் துப்பறியும் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், விறுவிறுப்பான திருப்பங்கள், உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் நிரம்பியிருக்கிறது.
படத்தில், சிக்கலான வழக்குகளைத் தீர்க்கும் திறமையான காவல்துறை அதிகாரி திலக் கதாபாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். தனது திறமையை வெளிப்படுத்தும் அளவிலான சவாலான வழக்குகள் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கும் அவருக்கு, ஒருநாள் பல ரகசியங்களும் அதிர்ச்சிகரமான உண்மைகளும் நிறைந்த ஒரு வழக்கு கிடைக்கிறது. அந்த வழக்கின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகளை கண்டுபிடிக்கும் பயணமே ‘மாறுவேஷம்’ படத்தின் மையக்கதை.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனி பகிர்ந்து கொண்டதாவது, “எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்த ‘மாறுவேஷம்’ என்ற இந்தப் படத்தின் தலைப்பே ரசிகர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய ஒன்று. யார் எதை மறைக்கிறார்கள், ஏன் ஒரு கதாபாத்திரம் மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது, அது வெறும் வெளிப்புற மாற்றமா அல்லது ஆழமான உணர்வுப்பூர்வமான பயணமா, பழிவாங்கலா, உயிர் பிழைப்பதற்கான போராட்டமா, காதலா அல்லது மறக்கப்பட்ட கடந்த காலத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியா என இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் படத்தில் சுவாரஸ்யமாக இருக்கும். கதாபாத்திரங்களின் இரட்டை முகங்கள், வெளிப்படும் ரகசியங்கள் மற்றும் இரண்டு அடையாளங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் சவால்தான் இப்படத்தின் மையம். முகம் மாறலாம். ஆனால், ஒருவரால் தனது கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியுமா?” என்றார்.
மர்மம், துப்பறிதல், சஸ்பென்ஸ் மற்றும் உணர்வுப்பூர்வமான திருப்பங்களின் கலவையாக உருவாகும் ‘மாறுவேஷம்’, திரில்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





