வித்தியாசமான தலைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த சுசி கணேசன் “ஒரண்ட” மூலம் மீண்டும் ஆச்சரியம்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளையும், ரசிகர்களின் கவனத்தை உடனே ஈர்க்கும் தலைப்புகளையும் வழங்கிய இயக்குநர்களில் முக்கியமானவர் சுசி கணேசன். அவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் அதன் கதைக்களத்தால் மட்டுமல்ல, தலைப்பின் மூலமும் ரசிகர்களிடம் தனி அடையாளத்தைப் பெற்றுள்ளன.

சுசி கணேசனின் பார்வையில், ஒரு திரைப்படத்தின் தலைப்பு என்பது வெறும் பெயர் அல்ல. அது படத்தின் முதல் அறிமுகம் மட்டுமல்ல, கதையின் உணர்வை ரசிகர்களிடம் முதலில் கொண்டு சேர்க்கும் முக்கிய அம்சமாகும். அதனால், தலைப்பு தேர்வில் அவர் எப்போதும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் இயக்கிய ‘திருட்டுப் பயலே’ திரைப்படத்தின் தலைப்பு, படம் வெளியாவதற்கு முன்பே பரவலான கவனத்தை ஈர்த்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு அதன் வித்தியாசமான தலைப்பும் முக்கிய காரணம் என்று இயக்குநர் கே. பாக்யராஜ் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.

அதேபோல், காதலை வெளிப்படுத்தும் பல வார்த்தைகள் இருந்தபோதிலும், ‘விரும்புகிறேன்’ என்ற எளிமையான சொல்லை தலைப்பாக தேர்வு செய்து, அதனை வித்தியாசமான விளம்பர யுக்திகளுடன் ரசிகர்களிடம் கொண்டு சென்றார். குறிப்பாக, சென்னை மவுண்ட் ரோட்டில் தீயணைப்பு குழாய்களால் நாயகன்-நாயகியை இணைத்துப் பிரதிபலித்த பிரம்மாண்ட பேனர் அப்போது பெரும் பேசுபொருளானது.

‘5 Star’ திரைப்படத்தின் மூலம் குழந்தைகள் மத்தியில் பரிச்சயமான ஒரு சொல்லை, வாழ்நாள் நட்பின் அடையாளமாக மாற்றியதோடு, ‘கந்தசாமி’ என்ற சாதாரண பெயரையே ரசிகர்களின் மனதில் சூப்பர் ஹீரோவின் உருவமாக பதிய வைத்தார். மேலும், அந்த காலகட்டத்திலேயே படத்தின் பூஜை நாளிலேயே டிஜிட்டல் திரை வழியாக டிரெய்லரை வெளியிட்டு புதிய புரமோஷன் முறையை அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதன் தலைப்பை பேச வைக்கும் திறன் கொண்ட இயக்குநராக சுசி கணேசன் அறியப்படுகிறார். அந்த வரிசையில், தற்போது ‘ஒரண்ட’ என்ற வித்தியாசமான தலைப்புடன் மீண்டும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் வட்டார வழக்குச் சொல்லை திரைப்படத் தலைப்பாக மாற்றியிருக்கும் சுசி கணேசன், இந்த முறை கதையின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளார்.

‘ஒரண்ட’ என்ற தலைப்பே வித்தியாசத்தை உணர்த்தும் நிலையில், அதன் பின்னால் இருக்கும் கதைக்களம் என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.