ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ திரைப்படம், கடத்தல் உலகின் மறுபக்கத்தையும், சுங்கத்துறையின் சவாலான பணிகளையும் மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியான தோ. சமய முரளி இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியதுடன், படத்தின் பின்னணி இசையையும் அவரே அமைத்திருக்கிறார்.
2008-ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் இணைந்த தோ. சமய முரளி, சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரி நிர்வாகத் துறைகளில் நீண்டகால அனுபவம் பெற்றவர். என்.ஐ.டி. திருச்சிராப்பள்ளி முன்னாள் மாணவரான அவர், சிறப்பான பணிக்காக 2021-ஆம் ஆண்டு உலக சுங்க அமைப்பு (World Customs Organization) வழங்கிய விருதையும் பெற்றுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் டி. சமய முரளி கூறுகையில், “‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ நான் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை ஆகும். கடத்தல், நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் செயல்பாடுகளை சுவாரசியமான சினிமா மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் சுங்கத்துறை வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படத்தின் நோக்கம்,” என்றார்.
திரைப்படத்தின் கதை, சென்னை குடிசைப் பகுதியில் வசிக்கும் அமர் மற்றும் தீனா என்ற இரண்டு இளைஞர்களை மையமாகக் கொண்டது. வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற கனவுடன் வாழும் அவர்களை, நிழல் உலக தாதா லிங்கம், குஜராத் துறைமுகம் வழியாக அதிக மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தும் ஆபத்தான பணியில் ஈடுபடுத்துகிறார்.
துபாயில் இருந்து செயல்படும் மேத்யூ பாய் தலைமையிலான இந்த சர்வதேச கடத்தல் வலையமைப்பை முறியடிக்க சுங்கத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா களமிறங்குகிறார். லஞ்சம், துரோகம், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் அந்த இரண்டு இளைஞர்களின் பயணமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.
இயக்குநர் தோ. சமய முரளி, ஐஆர்எஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல் எழுத்தாளர், ஆய்வாளர், இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ‘சுங்கம்: தி ஹெரிடேஜ் ஆஃப் சென்னை கஸ்டம்ஸ்’, ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, ‘காக்கி’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளதுடன், சுங்கத்துறை தொடர்பான அவரது ஆய்வுக் கட்டுரைகள் World Customs Journal-லிலும் வெளியாகியுள்ளன. மேலும், அவர் இயக்கிய ‘புதிய பார்வை’ குறும்படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதோடு, ‘சைலன்ட்’ திரைப்படத்தில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராம்பிரகாஷ் தயாரிக்கும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, அதிரடி, சஸ்பென்ஸ், உண்மை சம்பவங்களின் தாக்கம் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை இணைக்கும் விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் சுங்கத்துறை அதிகாரிகளின் தியாகத்தையும், கடமையுணர்வையும் வெளிப்படுத்தும் படைப்பாக இப்படம் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.





