ரோமியோ பிக்சர்ஸ் – விக்ரம் பிரபு கூட்டணியில் புதிய படம்… யுவன் இசையில் அதிரடி விருந்து!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தங்க மார்க்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை அம்சங்கள் நிறைந்த கமர்ஷியல் ஆக்சன் திரில்லராக உருவாக உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தனித்துவமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வரும் விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் இது 26வது திரைப்படமாக உருவாகிறது. குறிப்பாக டாணாக்காரன் மற்றும் சிறை போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு, அவர் தேர்வு செய்யும் கதைகளின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வரிசையில் இந்த புதிய படமும் முக்கியமான இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான திரைப்படங்களை தயாரிப்பதிலும், வெற்றிகரமாக விநியோகம் செய்வதிலும் தனி முத்திரை பதித்துள்ள ரோமியோ பிக்சர்ஸ், இந்தப் படத்தையும் உயர்ந்த தயாரிப்பு மதிப்பில் உருவாக்கவுள்ளது. புதிய களம், வலுவான கதைக்களம் மற்றும் தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படம் வடிவமைக்கப்படுகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பை அருள் மோசஸ் கவனிக்கிறார்.

இதனிடையே, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ரவி மோகன் நடிப்பில் ஒரு திரைப்படத்தையும், ஆகாஷ் முரளி நடிப்பில் மற்றொரு திரைப்படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. விக்ரம் பிரபு – சித்தார்த் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படம், தற்போது கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய அறிவிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.