‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வாலி மோகன் தாஸ், தனது அடுத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். ‘புரொடக்ஷன் நம்பர் 01’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முதல் கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியா ஃபிலிம் கம்பெனி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். குடும்பத்துடன் திரையரங்குகளில் கண்டு மகிழும் வகையில், அனைத்து வயதினரையும் கவரக்கூடிய முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தைத் தயாரிப்பதுடன் இயக்குநர் பொறுப்பையும் வாலி மோகன் தாஸ் ஏற்றுள்ளார். படத்தின் கதையையும் திரைக்கதை சார்ந்த எழுத்துப் பணிகளையும் வாலி மோகன் தாஸ் மற்றும் உமர் எஸ். ஆகியோர் இணைந்து மேற்கொள்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைக்க, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவைக் கையாள்கிறார்.
இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ரங்கோலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வாலி மோகன் தாஸ், தொடர்ந்து மலையாள நடிகர் ஷேன் நிகம், நிஹாரிகா கொனிடேலா மற்றும் கலைராசன் உள்ளிட்டோர் நடித்த ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு அவர் இயக்கும் புதிய படைப்பு என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், புதுமையான கதைக்களத்துடன் குடும்ப உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இதனை உருவாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் தயாரிப்பாக வெளியாகவுள்ள ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியீடு தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





