Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026) இந்தியன் பனோரமாவின் ‘New Horizons’ பிரிவில் திரையிடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்பட விழாவில் இடம்பிடித்து தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது ‘அறிவு’.
‘கழுகு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்கியுள்ளார். சாய்வினோத் ஜெயக்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களின் உரிமைகள், அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை மையமாக வைத்து அழுத்தமான சமூகக் கருத்துகளுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையை விறுவிறுப்பான திரைக்கதை வழியாகச் சொல்லும் படைப்பாக ‘அறிவு’ உருவாகியுள்ளது. சாய்பிரபு ஜெயக்குமார் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், I.M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவைக் கையாள, வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். S.K. கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ராமு M. தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், அரவிந்த் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், தென்னரசு தயாரிப்பு நிர்வாகியாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்குத் தேர்வாகியிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ளது. இந்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து, மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘அறிவு’ படத்தைத் திரையிடுவதற்கான முயற்சிகளிலும் படக்குழு ஈடுபட்டுள்ளது.
பெண்ணுரிமை மற்றும் சமூகத்தில் நிலவும் முக்கியப் பிரச்சினைகளைப் பேசும் இப்படம், சர்வதேச திரைப்பட விழாவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதால் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் பெற்றுள்ள இயக்குநர் சத்யசிவாவின் ‘அறிவு’ திரைப்படம், வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





