ஜி.வி. பிரகாஷ் – மாளவிகா மனோஜ் நடிக்கும் “அன்புடன் மகி” படத்தின் புதிய அப்டேட்!

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டப் பணிகளை எட்டியுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, ‘ஜோ’ படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தைப் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்குகிறார். ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், இசையமைப்பாளர் பொறுப்பையும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஏற்றுள்ளார். இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில், கிரிக்கெட் வீரராக அவர் திரையில் தோன்றவுள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்காக கிரிக்கெட் விளையாட்டில் சிறப்புப் பயிற்சிகளையும் மேற்கொண்டு தனது நடிப்பை மெருகேற்றியுள்ளார்.

‘ஜோ’ திரைப்படத்தில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ் இப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ், சன் டிவி தொகுப்பாளர் ராகேஷ் மற்றும் காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கர்ணன்’, ‘வாழை’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தனித்துவமான ஒளிப்பதிவில் கவனம் பெற்ற தேனி ஈஸ்வர் இப்படத்தின் ஒளிப்பதிவுப் பொறுப்பை ஏற்றுள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்புப் பணிகளையும், மீவின் வினோத் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதனுடன் விரிவான லுக் புக் ஒன்றையும் ரசிகர்களின் பார்வைக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் படத்தின் காட்சியமைப்பு, கதையின் பின்னணி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படத்தின் தனித்துவமான உருவாக்கம் குறித்த தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கிரிக்கெட் பின்னணியில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகும் ‘அன்புடன் மகி’ திரைப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகத் தயாராகி வருகிறது.