35 நாட்கள் மின்சாரத்தைத் தவிர்த்து பறவைகளைக் காப்பாற்றிய கிராமம் – “கூடு”!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’. உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையில் செயல்பட்டு வரும் பனோரமா ஸ்டுடியோஸ், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் சார்பில் எம். கணேஷ், கல்ட் டிஜிட்டல் சார்பில் சூனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.

தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் நடைபெற்ற நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவமே ‘கூடு’ திரைப்படத்தின் மையக்கரு. அரிய வகையைச் சேர்ந்த ஒரு பறவை மின்மாற்றிக்குள் கூடு கட்டி முட்டையிடுகிறது. அந்தப் பறவையையும் அதன் முட்டைகளையும் பாதுகாக்கும் நோக்கில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு முன்மாதிரியான முடிவை எடுக்கின்றனர். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் வரையில், தொடர்ந்து 35 நாட்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க அவர்கள் முன்வருகின்றனர். இந்த அபூர்வமான மனிதநேயச் சம்பவத்தை உணர்வுப்பூர்வமான திரைப்பட அனுபவமாக மாற்றியுள்ளார் அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய்.

நகைச்சுவை, அன்பு, பாசம் மற்றும் உணர்ச்சிகள் எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம், மனிதர்களிடையே நிலவும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும், பிற உயிர்கள் மீதான கருணையையும் எடுத்துரைக்கிறது. பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பிரபலமானவர்களாகவோ, அதிகாரம் படைத்தவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை; சாதாரண மனிதர்களின் ஒன்றுபட்ட முயற்சியும் அசாதாரணமான விளைவுகளை உருவாக்கும் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

தமிழகத்தின் கிராமிய வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு, உண்மையான கிராமப்புறப் பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உலகளாவிய மனிதநேய உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்கள் பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி, நமோ நாராயணா, ஷா ரா, சார்லஸ் வினோத், அனிதா சம்பத், சசி செல்வராஜ், திராவிட் செல்வம், VJ ஆஷிக் மற்றும் தனலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

பனோரமா ஸ்டுடியோஸ் தலைவர் குமார் மங்கட் பதக் கூறியதாவது:

“தயாரிப்பாளர்களாக, வித்தியாசமான கதைகளைத் தேடிக்கொண்டே இருக்கிறோம். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, உணர்வுகள், அன்பு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை அழகாக இணைத்திருப்பதால் ‘கூடு’ திரைப்படம் எங்களை மிகவும் கவர்ந்தது. இந்தக் கதை ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் இடம்பிடிக்கும் என்று நம்புகிறோம்.”

பனோரமா ஸ்டுடியோஸ் நிர்வாக இயக்குநர் அபிஷேக் பதக் கூறியதாவது:

“மனிதநேயம் என்பது எப்போதும் மிகப்பெரிய செயல்களைச் செய்வதில் மட்டுமே இல்லை என்பதை ‘கூடு’ திரைப்படம் நமக்கு நினைவூட்டுகிறது. மற்றொரு உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்யும் ஒரு சிறிய தியாகம்கூட மிகப்பெரிய அர்த்தத்தைக் கொண்டது. ஒரு பறவையின் கூட்டைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த கிராமமும் ஒன்றிணைந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதுடன் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்தக் கதை இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினோம்.”

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் M. கணேஷ் கூறியதாவது:

“‘கூடு’ திரைப்படத்தின் சிறப்பம்சமே அதன் மையத்தில் இருக்கும் அழகான சிந்தனைதான். மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சிறிய செயல்களின் மூலம் உருவாகும் பெரிய மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டாடும் கதை இது. இப்படத்தின் அன்பும் உணர்வுகளும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறோம்.”

கல்ட் டிஜிட்டல் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி கூறியதாவது:

“நேர்மையான அணுகுமுறையும் ஆழமான உணர்வுகளும் கொண்ட கதையாக ‘கூடு’ எங்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையிலிருந்து உருவாகும் கதைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் எவ்வாறு தொடர்புகொள்ள முடியும் என்பதை இப்படம் பிரதிபலிக்கிறது. கருணையையும் சமூக ஒற்றுமையையும் கொண்டாடும் இப்படத்துடன் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறோம்.”

பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை, ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

மனிதநேயம், கருணை, தியாகம் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை ஓர் உண்மைச் சம்பவத்தின் வழியாகப் பேசும் ‘கூடு’ திரைப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் உலகளவில் வெளியிடுகிறது.