இலங்கை மக்களின் வாழ்வியல், அவர்கள் எதிர்கொண்ட இழப்புகள், தாய்மண்ணின் மீதான பற்று மற்றும் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் வலியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தாய்நிலம்’. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை, கடந்த 2016-ஆம் ஆண்டு உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டை வந்தடையும் ஒரு தந்தை மற்றும் அவரது சிறுமகளைச் சுற்றி நகர்கிறது. தாய்நிலத்தை விட்டு வெளியேறிய அவர்கள், முற்றிலும் புதிய சூழலில் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப எதிர்கொள்ளும் சவால்களையும் போராட்டங்களையும் திரைப்படம் பதிவு செய்கிறது.
எல்லாவற்றையும் இழந்து தமிழ்நாட்டிற்கு வரும் தந்தையின் ஒரே இலக்கு, தனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்திற்காக அவர் எதிர்கொள்ளும் தடைகள், எதிர்பாராதவிதமாக கிடைக்கும் புதிய வாய்ப்புகள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களின் அன்பும் ஆதரவும் அவர்களின் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புதிய வாழ்க்கையில் கிடைக்கும் சுதந்திரம் ஒருபுறம் இருந்தாலும், தாய்நாட்டின் நினைவுகளும் அங்கு விட்டுச் சென்ற உறவுகளும் அந்த தந்தையின் மனதை தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றன. தாய்நிலத்தை இழந்த ஒருவரின் மனநிலை, புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்கும்போது உருவாகும் எதிர்பார்ப்புகள், உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலம் குறித்த கனவுகள் என பல்வேறு உணர்வுகளை இப்படம் பேசுகிறது.
இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட வலி மற்றும் இழப்புகளின் அதிகம் பேசப்படாத சில பக்கங்களையும் ‘தாய்நிலம்’ திரைப்படம் கதையின் வழியாக பதிவு செய்கிறது. குறிப்பாக, சொந்த மண்ணை விட்டு வெளியேறி வேறொரு இடத்தில் தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கும் மனிதர்களின் உளவியல் போராட்டங்களை மையமாகக் கொண்டிருப்பது டிரெய்லர் மூலம் தெரியவருகிறது.
இப்படத்தில் டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேகா அமர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலாசிங், தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் சொக்கம்பட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அபிலாஷ் ஜி. தேவ் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஔசேப்பச்சன் இசையமைப்பதுடன் பின்னணி இசையையும் கவனித்துள்ளார். படத்தொகுப்பை தீஜோ பி. வர்கீஸ், கலை இயக்கத்தை கைலாஸ் திரிப்பூனிதுறை, மிக்ஸிங்கை ராஜாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
திரையரங்க வெளியீட்டுக்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களிலும் ‘தாய்நிலம்’ திரைப்படம் கவனம் பெற்றுள்ளது. Toronto Tamil Film Festival – Canada, Luleå International Film Festival – Sweden, Catharsis International Film Festival – Belgium உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் இப்படம் Official Selection ஆக இடம்பெற்றுள்ளது.
மேலும், Crown Wood International Film Festival-ல் Best Indian Film, Seventh Art Independent International Film Festival-ல் Best Original Score, Tamil Nadu International Film Festival-ல் Best Debut Filmmaker மற்றும் Best Narrative Feature Film – Special Mention, Cosmos International Film Festival-ல் Best Cameraman மற்றும் Best Debut Director உள்ளிட்ட விருதுகள் மற்றும் அங்கீகாரங்களையும் படம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வெளியாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படத்தின் டிரெய்லர், படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை அழுத்தமான காட்சிகளுடன் வெளிப்படுத்தி வருகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கிடைத்த அங்கீகாரங்களைத் தொடர்ந்து டிரெய்லருக்கும் கிடைத்து வரும் வரவேற்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.





