பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர்களை தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், நடிகர் ரவி மோகன் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படத்தை ஆகஸ்ட் 28 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ படங்களைத் தொடர்ந்து, இந்த கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படமாக ‘கராத்தே பாபு’ உருவாகியுள்ளது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தை, வெற்றிப்படமான ‘டாடா’ திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ளார்.
ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ ஒரு பரபரப்பான அரசியல் திரில்லராக உருவாகியுள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் வெளியான முன்னோட்டம் மற்றும் இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்தப் படத்தின் மூலம், தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் கே.எஸ். ரவிக்குமார், சக்தி வாசு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே. பாபு, “அரசியல்வாதிகளை மையமாகக் கொண்ட பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் மனிதநேய உணர்வுகள் குறித்து அதிகம் பேசப்படவில்லை. அந்தக் கோணத்தை மையமாக வைத்து, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மறுபக்கத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் அரசியல் திரில்லராக ‘கராத்தே பாபு’ உருவாகியுள்ளது,” என்று தெரிவித்தார்.
அரசியல், உணர்வு மற்றும் பரபரப்பை இணைக்கும் ‘கராத்தே பாபு’, ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





