“தி பாரடைஸ்” திரை விமர்சனம்

“தி பாரடைஸ்” வெற்றிச் செழியன் இயக்கத்தில் வேலாயுதம் சுப்பிரமணியன் – V6 ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தினேஷ் ஆண்டனி. இந்த படத்தில் நானி, மோகன் பாபு, காயடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜுயல், சம்பூர்ணேஷ் பாபு, ஈஸ்வரி ராவ், தணிகெல்லா பரணி, பிரியதர்ஷி புலிகொண்டா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய முதலாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் அடிமைகளாக வாழ்ந்த சவாரி இன மக்கள், சுதந்திரத்திற்குப் பிறகாவது தங்களுக்கான தனி அடையாளத்துடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆனால், அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் கையில் வைத்திருக்கும் முதலாளி வர்க்கம் அவர்களுக்கு அந்த உரிமையை வழங்க மறுக்கிறது. தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த அடக்குமுறைக்கு எதிராக அந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் சவாரி இனத்தில் பிறக்கும் ஜடால், தனது தாயைப் போலவே அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிறார். தனது இன மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, அவர்களுக்கான உரிமையையும் அடையாளத்தையும் பெற்றுத்தர வேண்டும் என்பதே அவரது நோக்கம். அதற்காக அவர் நடத்தும் போராட்டம் எத்தகைய முடிவை சந்திக்கிறது என்பதே ‘தி பாரடைஸ்’ படத்தின் கதை.

ஜடால் கதாபாத்திரத்தில் நானி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், இரட்டை ஜடையுடன் தோன்றுகிறார். உடல்மொழி, பார்வை மற்றும் ஆக்ரோஷமான நடிப்பு என கதாபாத்திரத்தை முழுமையாக தன் தோளில் சுமக்க முயற்சித்திருக்கிறார். பல காட்சிகளில் அவரது நடிப்பு வலுவாக இருந்தாலும், படத்தில் தொடர்ந்து இடம்பெறும் அதீத வன்முறை காரணமாக அவரது நடிப்பின் தாக்கம் சில நேரங்களில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், கதையின் மையத்தில் இருக்கும் பெண் கதாபாத்திரத்திற்கு தேவையான வலிமையை வழங்கியிருக்கிறார். சில இடங்களில் அவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியிருந்தாலும், ஆண் கதாபாத்திரத்திற்கு இணையாக அவரது பாத்திரத்தை உருவாக்கியிருப்பது கவனம் பெறுகிறது. படத்தில் அவர் தோன்றும் காட்சிகள் சற்று ஆசுவாசம் அளிப்பதால், கதையில் அவருக்கான பங்கு இன்னும் விரிவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு, தனது அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இளமை மற்றும் வயதான தோற்றம் என இரண்டு காலகட்டங்களில் தோன்றினாலும், இரண்டிலும் கதாபாத்திரத்தின் அதிகாரத்தையும் கம்பீரத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நானியின் தாயாக சோனாலி குல்கர்னி, நண்பராக சம்பூர்னேஷ் பாபு, தணிகலபரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய், குப்பையும் சகதியும் நிறைந்த ‘பாரடைஸ்’ உலகத்தை திரையில் அழுத்தமாக உருவாக்கியிருக்கிறார். அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறை, உடைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை யதார்த்தத்திற்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில், படத்தின் பல காட்சிகளில் இருக்கும் செயற்கைத்தன்மையையும் பிரமாண்டமான காட்சியமைப்பாக மாற்றியிருக்கிறார்.

அனிருத்தின் இசை படத்தின் வன்முறை நிறைந்த காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் மனப் போராட்டங்களுக்கும் தேவையான அழுத்தத்தை வழங்குகிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.

படத்தொகுப்பாளர் நவீன் நூலி, அதிக எண்ணிக்கையிலான சண்டைக்காட்சிகளை கையாள வேண்டியிருப்பதால், படத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கிறது. தொடர்ந்து வரும் வன்முறை காட்சிகள் மற்றும் நீண்ட சண்டைப் பகுதிகள் படத்தின் ஓட்டத்தை பாதித்து, சில இடங்களில் பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகின்றன.

‘அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைக்க போராடும் ஒரு மனிதன்’ என்ற எளிய ஒன்-லைன் கதையை எடுத்துக்கொண்டு, அதனை முழுக்க ஒரே களத்தில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா.

கதையின் அடிப்படை மிகவும் அழுத்தமானதாக இருந்தாலும், திரைக்கதையை விரிவுபடுத்திய விதம் படத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. நாயகன் தாக்குகிறார், பின்னர் தாக்கப்படுகிறார்; மீண்டும் எழுந்து போராடுகிறார் என்ற சுழற்சியிலேயே பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன. இதனால் கதையில் ஏற்பட வேண்டிய அடுத்தகட்ட எதிர்பார்ப்பு குறைந்து, ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக, படத்தின் முக்கிய பிரச்சினையாக இருப்பது அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வன்முறை. கதை சொல்லலுக்கு தேவையான இடங்களைத் தாண்டியும் சண்டை, ரத்தம், கொடூரக் காட்சிகள் என படம் தொடர்ந்து பயணிப்பதால், கதையின் உணர்வுகளை விட வன்முறையே முன்னிலை பெறுகிறது.

நானியின் மாறுபட்ட தோற்றமும் ஆக்ரோஷமான நடிப்பும், ‘பாரடைஸ்’ என உருவாக்கப்பட்டிருக்கும் அழுக்கு மற்றும் அவலமான உலகமும் படத்தின் முக்கியமான பலம். குறிப்பாக செட் அமைப்பு, உடை வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட உலகம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

ஆனால், படம் முழுவதும் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை காட்சிகள், அதிகப்படியான ரத்தக்காட்சிகள் மற்றும் நீண்ட சண்டைப்பகுதிகள் கதையின் மைய நோக்கத்தையே சில இடங்களில் பின்னுக்குத் தள்ளுகின்றன. இதனுடன் படத்தின் நீளமும் சேர்ந்து பார்வையாளர்களை சோர்வடையச் செய்கிறது.

வித்தியாசமான உலகத்தையும், வலுவான கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருந்தாலும், அதிகப்படியான வன்முறை, நீளமான சண்டைக்காட்சிகள் மற்றும் ஒரே மாதிரியான திரைக்கதை ஓட்டம் ‘தி பாரடைஸ்’ படத்தின் தாக்கத்தை குறைக்கிறது. நானியின் நடிப்பும், படத்தின் பிரமாண்டமான காட்சியமைப்பும் ரசிக்க வைத்தாலும், ரத்தமும் வன்முறையும் அதிகமாக இருப்பதால் படம் அனைவருக்கும் ஏற்றதாக அமையவில்லை.

“தி பாரடைஸ்” படத்திற்கு மதிப்பீடு 3/5

அளவுக்கு அதிகமான வன்முறையும் நீளமான திரைக்கதையும் ‘தி பாரடைஸ்’ படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கிறது.