“தி கிராண்ட் மாஸ்டர்” வெற்றிச் செழியன் இயக்கத்தில் வேலாயுதம் சுப்பிரமணியன் – V6 ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தினேஷ் ஆண்டனி. இந்த படத்தில் அபர்ணதி, மாஸ்டர் அஷ்வின், கபாலி லிங்கேஷ், சுரேஷ் சந்திர மேனன், வெற்றிச் செழியன், தமிழரசி அன்பு, மனோ மதுரை, விசித்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கணவரை இழந்து துப்புரவு பணியாளராக வாழ்ந்து வரும் அபர்ணதி, தனது ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து ஒரு வழக்கறிஞராக உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். ஆனால், சதுரங்கத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் அவரது மகனுக்கு, அந்த விளையாட்டில் சாதித்து கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. மகனின் திறமைக்கும் ஆசைக்கும் சமூகத்தின் புறக்கணிப்பு தடையாக நிற்கிறது. அவரது தாய் செய்யும் தொழிலை காரணமாக வைத்து, மகனை மற்றவர்கள் ஒதுக்குகின்றனர். இதை உணர்ந்துகொள்ளும் அபர்ணதி, மகனின் கனவை நிறைவேற்றுவதற்காக தானே சதுரங்கப் பயிற்சியை கற்றுக்கொடுத்து, அவனை நிராகரித்தவர்களுக்கு முன்னால் அவன் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று போராடுகிறார். ஒரு தாயின் போராட்டம், ஒரு சிறுவனின் கனவு, சமூகப் பாகுபாடு என பல அடுக்குகளைக் கொண்ட இப்படம், அபர்ணதிக்கும் சதுரங்க விளையாட்டுக்கும் இருக்கும் எதிர்பாராத தொடர்பையும் வெளிப்படுத்துகிறது. துப்புரவு தொழிலாளியாக இருக்கும் ஒரு பெண் எப்படி சதுரங்க உலகத்துடன் இணைகிறார் என்பதே படத்தின் முக்கியக் களம்.
விளையாட்டில் திறமை மட்டுமே முக்கியம் என்ற பொதுவான பார்வைக்கு பின்னால் மறைந்திருக்கும் சமூக மற்றும் பொருளாதார தடைகளை இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. பள்ளி அளவில் தொடங்கி பயிற்சி மையங்கள், போட்டிகள் என விளையாட்டுத் துறையின் பல்வேறு நிலைகளிலும் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை என்பதை இயக்குநர் வெற்றி செழியன் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதால், காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை போல இல்லாமல் இயல்பாக நகர்கின்றன. குறிப்பாக, சமூகத்தால் நிராகரிக்கப்படும் தருணங்கள் பார்வையாளர்களுக்கு அசௌகரியத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.
அபர்ணதி மீண்டும் ஒரு அழுத்தமான வாழ்க்கைப் பின்னணி கொண்ட கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் தொடர்ந்து தோன்றுவது சில பார்வையாளர்களுக்கு ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்தலாம். இருப்பினும், கதாபாத்திரத்தின் தோற்றம், உடல்மொழி மற்றும் மனநிலையை உள்வாங்கி நடித்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, ஒரு தாயாக மகனுக்காக போராடும் காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் கதையின் உணர்வை கடத்துகிறார்.
அபர்ணதியின் கணவராக நடித்திருக்கும் லிங்கேஷ், தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார். சுரேஷ் மேனன் எதிர்மறை கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். அபர்ணதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் அஸ்வின், தமிழரசி, அன்பு உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன்.ஆர்.எஸ்., கதாபாத்திரங்கள் வாழும் சூழலையும், அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான வாழ்க்கை நிலைகளையும் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்கள். சில காட்சிகள் பார்வையாளர்களை நேரடியாக அந்த சூழலுக்குள் அழைத்துச் செல்லும் அளவுக்கு யதார்த்தமாக இருக்கின்றன.
தினேஷ் ஆண்டனியின் இசை கதையின் உணர்வுகளுக்கு துணை நிற்கிறது. பாடல்கள் கதாபாத்திரங்களின் மனநிலையையும் கதையின் போக்கையும் வெளிப்படுத்துகின்றன. பின்னணி இசை அதிகப்படியான கவனத்தை ஈர்க்காமல், காட்சிகளின் இயல்புத்தன்மையை காப்பாற்றியபடி பயணிப்பது சிறப்பு.
படத்தொகுப்பாளர் ரஞ்சி.சி.கே, உண்மை சம்பவங்களின் அடிப்படையிலான கதைக்கு தேவையான வேகத்தையும் உணர்வையும் சரியான அளவில் கையாண்டிருக்கிறார். மனதை கனக்கச் செய்யும் காட்சிகளுக்கும், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பகுதிகளுக்கும் இடையே நல்ல சமநிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.
வெற்றி செழியன், விளையாட்டை வெறும் வெற்றி – தோல்வி என்ற கோணத்தில் அணுகாமல், அந்தத் துறைக்குள் இருக்கும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார்.
விளையாட்டுத் துறையில் சாதி, பொருளாதாரம் போன்ற காரணிகள் ஒருவரின் திறமைக்கு தடையாக எப்படி மாறுகின்றன என்பதை நேரடியாகவும், சில இடங்களில் கடுமையாகவும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் சில காட்சிகளை திட்டமிட்டு வைத்திருப்பது, அந்தச் சூழல்களை நிஜத்தில் எதிர்கொண்டவர்களின் வேதனையை உணர வைக்கிறது.
“திரையில் பார்க்கும் இந்த சம்பவங்களே நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கு நடந்தால், அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?” என்ற கேள்வியை படம் பார்வையாளர்களிடம் எழுப்புகிறது.
தமிழ் சினிமாவில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து சாதி மற்றும் பொருளாதார வேறுபாடுகளைப் பேசிய படங்கள் ஏற்கனவே இருந்தாலும், ‘தி கிராண்ட் மாஸ்டர்’ உண்மை சம்பவங்களின் தன்மையை விட்டுவிடாமல் அதை காட்சிப்படுத்த முயற்சித்திருப்பது வேறுபட்ட அணுகுமுறையாக உள்ளது.
கருத்தியல் ரீதியாக படம் வலுவாக இருந்தாலும், சில இடங்களில் கதை சொல்லும் விதம் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். குறிப்பாக, பொருளாதார ரீதியில் பெரிய அளவிலான தயாரிப்பாக இல்லாதது சில காட்சிகளில் வெளிப்படுகிறது. அதேபோல், சில காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் நோக்கத்தில் சற்று அதிகமாக அழுத்தம் கொடுக்கின்றன.
இருப்பினும், இந்தக் குறைகளைத் தாண்டி, தான் சொல்ல வந்த சமூகக் கருத்தை இயக்குநர் தெளிவாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
சதுரங்கப் போட்டியை மையமாக வைத்துக்கொண்டு ஒரு சாதாரண விளையாட்டுத் திரைப்படமாக நகராமல், திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படும் மனிதர்களின் வலியையும், சமூகப் பாகுபாடுகளையும் பேசும் படமாக ‘தி கிராண்ட் மாஸ்டர்’ உருவாகியுள்ளது. சில காட்சியமைப்பு குறைகள் இருந்தாலும், கருத்தியல் ரீதியில் படம் சொல்ல வரும் விஷயம் அழுத்தமாக பதிவாகிறது.





